பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மொழி

225


குடியினர் தமிழர். தமிழ் நாட்டின், தொன்மைக்குத் தமிழக வரலாறே சான்றாகும். உலக மொழிகளில் தமிழ் ஒரு சிறந்த செல்வியல் மொழி, இலக்கிய வளமும் இலக்கண வரம்பும் பெற்று விளங்கும் பெருமொழி. ஒரு மொழி, இலக்கண வரம்பைப் பெறவே பல நூற்றாண்டுகள் பிடிக்கும். அது மட்டுமல்ல. தமிழைப்போல் இனிமையும் எளிமையும் படைத்த மொழி உலகில் வேறு இல்லையென்றே கூறலாம்.

எந்த ஒரு மொழிக்கும் இனிமையும் எளிமையும் எளிதில் வாரா. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் மக்கள் மத்தியில் பேசப்பட்டதன் காரணமாக ஒரு மொழி இனிமை பெறுகிறது; எளிமை பெறுகிறது. உலகின் எல்லா மொழிகளிலும் மொழிக்கு இலக்கணம் செய்யப் பெற்றுள்ளது. ஆனாலும் தமிழுக்கு வாய்த்திருப்பதைப் போல் இலக்கண வரம்பு மற்ற மொழிகளுக்கு வாய்க்கவில்லை.

தமிழ் மக்கள் தாங்கள் பேசிய மொழிக்கு மட்டுமன்றித் தங்கள் வாழ்க்கைக்கும் இலக்கணம் செய்துள்ளனர். இன்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது தொல்காப்பியம். தொல்காப்பியம் அகத்திணை என்று வீட்டு வாழ்வுக்கும், புறத்திணை என்று புறத்தே இயங்கும் வாழ்வியலுக்கும், இலக்கணம் கண்டு நெறிப்பட வாழ்தலை அறிவுறுத்தியது. மற்றும் இசை, கட்டடக் கலை முதலியவற்றிலும், காலத்தால் முத்து முகிழ்த்த பெரிய வரலாறு தமிழினத்திற்கு உண்டு. மெய்ப்பொருளியலிலும் தமிழே உலகத்திற்குத் தாயாக விளங்கியது; தமிழகமே சிறந்து விளங்கியது. இன்ன பிற சிறப்புகளெல்லாம் பெற்று விளங்கிய தமிழ்மொழி இன்று வளரவில்லை. வளர இயலவில்லை. ஆரியத்தாலும் ஆங்கிலத்தாலும் அன்னை மொழியாம் தமிழ் நெருக்குண்டு பொலிவிழந்து நிற்கின்றது. தமிழ் மக்களின் தமிழார்வம் புதை யானை வெளிவர முடியாது தவிப்பதைப் போலத் தத்தளிக்கிறது. மதப் புரோகிதர்கள், மதத் தலைவர்கள் ஆகியோர் மதச் சடங்குகளில் ஞானத் தமிழைப் புறக்கணிக்கிறார்கள்;