பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

226

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தீண்டாமையைப் பாராட்டுகிறார்கள். நீரையும் நெருப்பையும் வெற்றிகொண்ட வீறு தமிழ், ஆன்மீக ஞான அமுதை அள்ளி வழங்கிய தமிழ் புறக்கணிக்கப்படுகிறது.

இந்த நிலவுலகத்திற்கு ‘ஞாலம்’ என்று அறிவியற் பொருள் சார்ந்த சொல்லைக் கண்டது சொற்றமிழ். அணு இலக்கணம் கண்டு காட்டியது கன்னித்தமிழ். உயிர்களின், பரிணாம வளர்ச்சியைப் பாங்குடன் எடுத்துக் கூறியது தொல்காப்பியம் தந்த தமிழ். வலவன் ஏவா வானவூர்தியை, பழந்தமிழ் மூளை அறிந்திருந்தது. வானவியலறிவைத் தமிழகம் பெற்றிருந்தது. இன்ன பிற அறிவியல் கருத்துக்கள் தமிழில் இருந்தும், தமிழ், அறிவியல் மொழியாக வளர முடியவில்லை; தொழிலியல் நுட்பம் சார்ந்த மொழியாக வளர இயலவில்லை. காலந்தோறும் புதுமை நலன்கள் பெற்றுப் பொலிவுடன் வளர்க்கப் பெறாமையால் தமிழ். இளமைத் தன்மையை இழந்திருக்கிறது. தமிழர்கள் மூளைச் சோம்பலுக்கும் உடற் சோம்பலுக்கும் இலக்காகியுள்ளனர். ஆதலால் தமிழர் வளரவில்லை; தமிழும் வளரவில்லை. தமிழக வரலாற்றில் ஒரு தேக்கம். தமிழ் மக்கள் நிறைய கற்கிறார்கள்; பேசுகிறார்கள். ஆனால் அறிவு பெற மறுக்கிறார்கள். அறிவு என்ற ஆற்றல் மிக்க கருவியைத் தமிழ்மக்கள் பெறாமையால் அவர்களுடைய வாழ்க்கையில் வளர்ச்சி இல்லை; மாற்றங்கள் இல்லை. பசி, சங்ககாலப் பசிப்பிணி மருத்துவன், பண்ணன், காலந்தொட்டு இன்று வரை தமிழகத்தை உள் நின்று வருத்துகிறது; துன்புறுத்துகிறது. சங்க காலம் முதல் “யாவரும் கேளிர்” என்று தொடங்கி இன்று வரை சாதித் தீமைகளை எதிர்த்துப் போராடியும் சாதி ஒழிந்தபாடில்லை. சாதி ஒழியாதது மட்டுமல்ல. மேலும், மேலும் வளர்ந்து வருகின்றது. நான்காம் நூற்றாண்டில் தமிழினத்தைச் சீர்குலைக்க முயன்று சாதிகளை—சாதி வேற்றுமைகளை நுழைத்த தீய சக்திகள், இன்று தமிழ் மக்களின் அங்கீகாரத்துடள் உலாவருகின்றன. இழிவுக்கு