பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மொழி

227


வெட்கப்படாத இழி ஜன்மங்களாகிவிட்டனர். எல்லாவற்றிற்கும் காரணம் கடவுள் பெயரால் செய்யப் பெறும் கயமைகளேயாம். தமிழ் மக்கள் அறிவும் தெளிவும் இல்லாது எல்லாவற்றையும் நம்பிவிடுகின்றனர். இந்த இழிநிலையிலிருந்து தமிழகத்தை மீட்கத் திருவள்ளுவர், அப்பரடிகள், சேக்கிழார், வள்ளலார் ஆகியோர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் போதிய பயனைத் தரவில்லை. மீண்டும் மீண்டும் தமிழகம் புதை மணலில் சிக்கிய யானை போலச் சீரழிகிறது.

தமிழ் மக்களே! உங்கள் தாய் மொழியாம் தமிழில் படிக்க எண்ணுங்கள்! தமிழிலேயே சிந்தனை செய்யுங்கள்! தமிழ் நெறியில் நின்று ஒழுகுங்கள்! ஒன்றே குலம்! ஒருவனே தேவன்!

45. [1]வாழ்க்கைக்குத் தமிழ் பயில்!

வாழ்க்கை வாழ்வதற்கே! வாழ்க்கையை வளர்ப்பது - உருவாக்குவது எண்ணமே! எண்ணங்களுக்கு ஊற்றுக் கண் சிந்தனை. கற்ற நூலறிவும் சுற்றுப்புறங்களின் நிகழ்வுகளும் சிந்தனையில் தாக்கம் உண்டாக்கும் பொழுது அறிவு தலைப்படுகிறது. அந்த அறிவுக்குத் தாயகம் சிந்தனையே! சிந்தனையுடன் தொடர்பில்லாத கல்வி பயனற்றது! சிந்தனையுடன் தோய்வுபெறாத கேள்வி பயனற்றது. பயனற்றது மட்டுமல்ல. பாதகங்களும் செய்யும்! சிந்தனையுடன் இசையாத வாழ்க்கை. பாழ்! நாட்டின் அன்றாடச் சுற்றுப் புற இயக்கங்கள் சிந்தனையைத் தொடாவிடில் உயிர்ப்பு இல்லை; இயக்கம் இல்லை! ஏன்? சிந்தனை சார்ந்த கடவுள் நம்பிக்கை, வழிபாடு ஆகியனவே பயனுடையன. மற்றெல்லாம் மூடத்தனமானவையே!


  1. சிந்தனை மலர்கள்