பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

228

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



சிந்தனை இயக்கத்திற்கு - செயல்பாட்டிற்குத் தாய் மொழியே துணை செய்யும் கருவாகக் கிடக்கும் காலத்திலேயே சிந்தனைப்புலன் இயங்கத் தொடங்கி விடுகிறது! பின், பிறந்து மொழிபயின்ற காலத்திலிருந்து சிந்தனைப்புலன் உடனிருக்கிறது. உற்ற துணையாய் அமைந்திருக்கிறது. கருநிலைக்காலம், மழலைப்பருவம் ஆகியவற்றில் தாயின் நடைமுறைகளும், குடும்பச் சூழ்நிலைகளும் சிந்தனையை இயக்குகின்றன. இந்தப் பருவ காலங்களில் சிந்தனைப்புலன் தனக்குரிய பற்றுக்கோட்டைத் தானாகத் தேடிக் கொள்வதில்லை. தாயும் குடும்பச் சூழ்நிலையும் அமைத்துக் கொடுத்த பற்றுக் கோடுகளேயாம்! இளமையில் கல்விச் சாலையும், ஊரும் இந்தப் பொறுப்பை ஏற்கின்றன. இதுவரையில் ஒருவரின் வாழ்க்கையில் தாய்மொழியே ஆதிக்கம் செலுத்துகிறது. தாய்மொழி வாயிலாகவே சிந்தனைக்குக் களங்கள் கிடைக்கின்றன. ஆதலால் சிந்தனைக்குரிய மொழி, தாய் மொழியே! எங்குச் சிந்தனை வளமாக இருக்கிறதோ அங்கு அறிவு வளரும். அந்த அறிவு வாழ்க்கையை வளர்க்கும் நமக்குத் தாய்மொழி, தமிழ்! நமது தலைமுறை தமிழிலேயே பழகிவந்த தலைமுறை, நம்முடன் விளையாடிய தோழர்கள் தமிழிலேயே சிந்தித்தார்கள்; பேசினார்கள்; நம்முடைய ஊரின் வீதிகள் தோறும் தமிழிலேயே பேச்சு கருத்துப் பரிமாற்றங்கள்! நாம் கல்வியைத் தொடங்குவது - கற்பது தமிழில்! ஆக, எங்கும் தமிழ்! நமது தாய்மொழி தமிழ்! தமிழே நமது சிந்தனைக்குரிய மொழி, கல்வி பயில்வதற்குரிய மொழி; அறிவு மொழி; வாழ்க்கை மொழி; வாழ்விக்கும் மொழி!

ஆதலால், தமிழ் பயிலுக! தமிழ் வழிப் பயிலுக! நாம் உண்மையில் சிந்திக்கின்றவர்களாக வேண்டும் எனில் தமிழ் வழிக் கற்பதே முறை. தமிழ் வழிப்பயிலும் பொழுது சிந்தனை விரிவடையும்; வினாக்கள் பலதோன்றும்; ஆய்வுகள் வளரும்; அறிவு விரிவடையும். இதுவே, வாழ்வாங்கு வாழும் நெறிமுறை.