பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

232

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வர மறந்தார்கள். அக்கருத்துக்கள் கொண்ட பாடல்களை ரசித்தனர். அனுபவத்திற்குக் கொண்டு வரவில்லை. கதா காலட்சேம் செய்து காலங்கழித்தனர். கவிஞரின் கருத்தைச் செயல்படுத்தவில்லை. போதும் போதாததற்கு அறிவையும், முயற்சியையும் நம்பாத பிற்போக்கு மனம் படைத்த திண்ணைத் தூங்கி மதவாதிகள், இராவணன் வான வீதியில் பறந்ததற்குக் காரணம் அவன் சிவபெருமானிடம் பெற்ற வரமே என்று சமாதானம் கூறி மனித சக்தியை அறியாமையில் ஆழ்த்தினர். அன்று இராவணன் பறந்ததற்குச் சிவபெருமான் தந்த வரம் காரணம் என்றால், இன்று சிவபெருமானையே நம்பாத - தவம் செய்யாத - செய்ய மனமில்லாத “காகரின்” வான வெளியிற் பறந்து திரிந்து வந்திருக்கிறானே, என்ன சமாதானம் சொல்ல முடியும்? இது போலவே, இந்த நூற்றாண்டில் அணுவைப்பற்றி அதிகமாகப் பேசப்பெறுகிறது. இந்த-யுகத்தை அணுயுகம் என்றே சொல்லலாம். இந்த அணுவைப் பற்றி நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்த்த மாணிக்கவாசகர் தெளிவாகப் பேசுகிறார். அனுதேய்ந்து தேய்ந்து செல்லக் கூடியதே எனக் குறிப்பிடுகிறார்.

“சென்று தேய்ந்து தேய்ந்து அணுவாம்” என்கிறார். இந்த அற்புதமான கருத்தை-இக்கருத்து நிரம்பிய பாடல்களைப் பரகதிக்குப் பாதைகாட்டும் பாடல்களாக மட்டும் நினைத்தோமேயொழியப் பாரினை வளமாக்கப் பயன்படும என நினைத்தோமில்லை. கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அழும் கதையாக முடிந்தது.

தமிழ் வளர்ந்த-வளமான மொழி. தமிழர்கள் தாம் முயன்று தமிழில் அறிவியலை தாவர இயலை- உள இயலை வளர்க்காத குறையை மொழிமீது சுமத்த வேண்டாம். இன்னமும் காலம் கடந்துவிடவில்லை. முடியுமா முடியாதா என்ற சண்டையை நிறுத்திவிட்டுத் தமிழுக்கு அறிவியலைக் கொண்டு வந்து சேர்ப்போம் என்ற முழு உணர்வுடன்