பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மொழி

233


முயற்சிப்போம். அங்ங்ணம் முயற்சிப்போமானால், எண்ணிச் சில ஆண்டுகளுக்குள்ளாகவே தமிழில் அறிவியல் வளம் கொழிக்கும். மேற்கத்தியர் அறிவியல் கற்கத் தமிழ் பயிலத் தொடங்குவர். நம்மால் முடியும். அறிவும் திறமையும் வழிவழியாக நம்மைத் தொடர்ந்து வருவன.

2. உணர்வை வளர்ப்பது தமிழே!

நடமாடுகின்ற மனிதனுக்கு முதுகெலும்பு இன்றியமையாத ஒன்று, அது போலவே வாழ்கின்ற மனித சமுதாயத்திற்கு - வளர்ந்து வாழ்கின்ற மனித சமுதாயத்திற்குத் தாய் மொழி இன்றியமையாத ஒன்று. (ஓர்) இனம் சிந்தனையால், செயலால், செல்வத்தால் செழித்து வளர, தாய்மொழியே துணைசெய்கிறது. தாய் மொழியால் இனம் வளர்கிறது; மொழிவழிப்பட்ட நாகரிகமும் வளர்கிறது.

பிறந்து, மொழி பயிலத் தொடங்குங் காலத்தலிருந்து பேசும் மொழியே தாய்மொழி, மழலையில் தொடங்கும் மொழியே தாய்மொழி. தாய் மொழி என்று கூறக் காரணம் என்ன? உடலுக்குத் தாய்போல் உள்ளத்திற்குத் தாய் மொழி, யாருடைய துணையும் இன்றி எல்லோரும் தாயைத் தாமே அறிந்து கொள்கிறார்கள்; அன்பு காட்டுகிறார்கள்; அன்பைப் பெறுகின்றார்கள். அதுபோலவே ஆசிரியர் துணை இன்றித் தாமே இயல்பாக உணரக்கூடிய மொழியே தாய்மொழி. இயல்பான தாய்மொழி வழியாகப் பெறுகின்ற சிந்தனை இயற்கையோடியைந்ததாகும்; எளிமையில் செயற்படக் கூடிய ஒன்று. எத்துறை வளர்ச்சிக்கும் சிந்தனையே மையம்; அடிப்படையும் கூட, எல்லோரும் தாய் மொழியில் சிந்திப்பது எளிது. பிற மொழிகளில் சிந்திப்பது முடியாத ஒன்று, ஆங்கிலத்தில் துறைபோகிய அறிஞர்கள் கூட அவரவர் தாய் மொழிகளிலேயே சிந்திக்கிறார்கள் என்ற அனுபவம் மறைக்க கூடியதல்ல. சிந்திப்பதற்குரிய மொழிவழியாகப் பெறுகின்ற