பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

238

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


குரிய காரணங்களுள் ஒன்று அவர்களுடைய வாழ்க்கையில் அடிக்கடி பிறமொழிகளின் நுழைவும், அவ்வழி அயல் வழக்கின் ஆட்சியும் ஆகும். இந்த நாட்டின் சுதந்திர சாசனத்தில் இந்நாட்டின் பல்வேறு மொழிகளுக்கும் சுதந்திரமான வளர்ச்சி இருக்கும் என்று குறிப்பிடப் பெற்றுள்ளது. மாநில அளவில் தாய்மொழியே ஆட்சி மொழியாகவும் பயிற்சி மொழியாகவும் இருக்க வேண்டுமென்பது மக்களின் வேட்கை.

தாய்மொழி வழியிலேயே ஓர் இனம் சிறந்த தெளிவான - ஆழமான - தன்வயப்பட்ட அறிவைப் பெற முடியும். இது மறுக்கவோ மறக்கவோ முடியாத உளநூல் உண்மை. தாய் மொழி வாயிலாகப் பெறும் அறிவு உழுத நிலத்தில் மழை பெய்ததுபோல. பிறமொழி மூலம் பெறும் அறிவு பாறை நிலத்தில் மழை பெய்தது போல. தாய்மொழி மூலம் பெறும் அறிவு - அளவில் சிறியதாக இருப்பினும் - தன்னியல்பான சிந்தனையின் வழி மேலும் சிறந்து வளர வாய்ப்புண்டு! அது ஊற்றுக்கேணி போல. பிறமொழி மூலம் பெறும் அறிவு அளவிற் பெரிதாக இருந்தாலும் கூட சிந்தனை சிறக்க வழியில்லாததினால் நீர் நிறைத்து வைக்கும் குளம் போலவே அமையும், அது மேலும் வளர வழியில்லை, ஊற்று இல்லாமையால். தாய்மொழி மூலம் பெறும் அறிவு ஊற்றுக் கிணறு போல ஆற்றொழுக்காக - வழிவழித் தொடர்ந்து வளரும். பிறமொழி அறிவுக்கு தொடர்ச்சி இருக்காது. தாய் மொழியின் மூலம் கலைகளைப் பயிலுதல் குறைந்த நேர அளவில் இயலும். ஏன் எனில் மொழியறிவு பெறும் முயற்சி தேவைப்படாது. கலையறிவைப் பெறுதல் ஒன்றே செய்ய வேண்டும். பிறமொழி வழியாகக் கலைகளைப் பயில்வது சற்றுக் கடினம் காலமும் அதிகமாகத் தேவைப்படும். ஏன் எனில் தனக்குத் தொடர்பில்லாத மொழியறிவைப் பெற்று அதன்பின் கலைகளைப் பயில வேண்டும். பிறமொழி அறிவைப் பெறுவதிலேயே அதிக நாளும் அதிக சக்தியும்