பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மொழி

239


வீணாகிறது. ஆதலால் தாய்மொழியே பயிற்சிமொழியாக இருப்பது நல்லது. நாட்டுக்கும் நல்லது. இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு தமிழக அரசு கோவையில் சில கல்லூரிகளில் தமிழைப் பயிற்சிமொழியாக கொண்டு வந்தது. நடப்பு ஆண்டில் தமிழக அரசினரின் பயிற்சி மொழிக் கொள்கையில் சலனம் ஏற்பட்டுள்ளதாகப் பலர் கருதுகின்றார்கள். தமிழ் பயிற்சிமொழியாக இருப்பதில் அரசு ஆர்வம் காட்ட இல்லையோ என்ற ஐய உணர்வும் எழுந்ததுள்ளது.

தமிழ்மொழி மூலம் பயிற்றுவிக்கும் கல்லூரிக்கு மாணவர்கள் விரும்பி வரவில்லை என்று அரசியலார் கூறியுள்ளார்கள். ஆனால் உண்மை அதுவல்ல என்பதை பிள்ளைகளின் சேர்க்கை தெளிவாக்கக்கூடும். அப்படியே பிள்ளைகள் விரும்பி வரவில்லை என்பதற்காகப் பயிற்சிமொழிக் கொள்கையில் மாறுதல் ஏற்படலாமா? பிள்ளைகளின் விருப்பம் மட்டுமே நாட்டின் தன்மைக்கு அளவு கோலாக அமைய முடியாது. நாட்டின் நலத்திற்கு எது நல்லதோ அவ்வழியிற் பிள்ளைகளை வழிநடத்தும் பெருங்கடமை அறிஞர்கட்கும், அரசுக்கும் இருக்கின்றது. ஏன்? பெரும்பாலான பிள்ளைகள் இந்தி படிக்க விரும்பவில்லை என்பதற்காகத் தேசிய மொழியை கற்காமல் இருக்க முடியுமா?

பிள்ளைகள் வரவில்லை என்றால், அது கல்விக் கொள்கையில் நாம் காட்டுகின்ற குழப்பமே காரணம். கல்வித் துறையில் இரண்டு ஜாதியை நாம் உருவாக்குகின்றோம். ஒரு ஜாதி ஆங்கிலம் மூலம் பயிலும் ஜாதி; இன்னொரு ஜாதி தாய்மொழி வாயிலாகப் பயிலும் ஜாதி. இந்த இரு ஜாதிகளிலும் எந்த ஜாதிக்கு எதிர்காலம் இருக்கும் என்பதிலும் மாணவர்கட்கு ஒரு தடுமாற்றம். பல சமயங்களில் ஆங்கிலம் மூலம் பயின்ற ஜாதிக்குச் சாதகமாகப் பலர் பேசுகின்றமையால் மாணவர்கட்கு அதில் விருப்பம் இருக்கக்கூடும். இப்படிக் கல்வித் துறையில் இரண்டு ஜாதிகளைப் படைப்பதே அடிப்படையில் தவறு.