பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மொழி

241


ஓடி வரலாம். அங்ஙனம் ஓடிவரும் தண்ணீர் வாய்க்காலுக்காக அல்ல - வயலுக்காகவே, அதுபோலத் தமிழர்கள் பன்மொழியும் பயிலலாம். ஆனாலும், அவர்களுடைய தாய் மொழியாகிய வயலை வளப்படுத்தவே பன்மொழிப் பயிற்சி.

எனவே, தமிழக அரசினர் எந்தவிதமான தயக்கமுமின்றித் தாய்மொழி வாயிலாகப் பயிற்றுவிக்கும் கொள்கையை நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றோம்.

4. தாய்மொழிச் சிந்தனை

நாட்டின் வழி, மொழி வழி, பண்பாட்டின் வழி எண்ண - சிந்திக்கச் சுதந்திரம் வேண்டும். அந்தச் சுதந்திரம் இல்லையானால், இந்த நாட்டைச் சுதந்திரநாடு என்று சொல்லுவதிலோ, இந்த நாட்டை நம்மவரே ஆளுகின்றனர் என்று சொல்லுவதிலோ பொருளில்லை.

இந்த நாட்டில் நெய்வேலி நிலக்கரியையும், சேலத்து இரும்பையும், பார்க்கிறோம். எண்ணற்ற இயந்திரக் கருவிகளை உற்பத்தி செய்கிறோம். இவற்றையெல்லாம் உற்பத்தி செய்துவிட்டு, இவற்றை அனுபவிக்க மனம் படைத்த மனிதர்களைப் படைக்கவில்லையென்றால் என்ன பயன்? அவற்றை யார் அனுபவிப்பது?

சுதந்திரம் பெற்றிருக்கிறோம். சுதந்திர உணர்வுடையவர்களாக வாழ்கிறோம் என்றால் ஒரு சாதாரணக் குடிசைக்கு நாம் போனாலும் அங்கும் மொழி, அரசியல், பொருளாதாரச் சிந்தனைகளை - பிரச்சினைகளைக் காண வேண்டும். அப்போதுான் உண்மையான சுதந்திரம் வந்திருக்கிறது என்று கருதமுடியும். இப்போது எத்தனை குடிசைகளிலே - சாதாரண மக்களிடையே இந்தப் பிரச்சினைகளைப் பார்க்கிறோம்? எனவே, நாம் இன்னும் பரிபூரண சுதந்திரம் பெறவில்லை என்பதுதானே கருத்து,