பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

246

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கூறிக்கொள்ள விரும்புகின்றோம். வாழ்க்கையின் பண்பாட்டை மீண்டும் கொலுவேற்றுவதுதான் தமிழ் ஆட்சி மொழி - தமிழ் பயிற்சி மொழி என்பதெல்லாம். எனவே, தமிழ் பயிற்சி மொழியாக்க நாம் அனைவரும் முயற்சிப்போம்; நமது கோரிக்கையில் நியாயமிருக்கிறது. நேர்மையிருக்கிறது. எனவே, நிச்சயம் வெற்றி பெறுவோம். திருவருள் அதற்குத் துணைநிற்கும்.

5. ஆட்சிமொழி

இந்திய ஆட்சி மொழி சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப் பெற்றுவிட்டது. தமிழன் தன்னுடைய தாய் மொழியைக் காப்பாற்றி வளர்க்க வேண்டும் என்ற உறுதியில்லாமல் பதவி - பணப்பிச்சை கருதித் தாய்மொழிப்பற்றை இழப்பானாகில் ‘மெல்லத் தமிழினிச் சாகும்’ என்ற கவிஞன் கூற்று உண்மையாகிவிடும்.

பல்வேறு மொழிபேசும் மக்கள் வாழும் நாட்டில் ஆட்சிமொழிச் சிக்கல் தவிர்க்கமுடியாததே. 782 மொழிகளுக்கு மேற்பட்ட மொழிகளைப் பேசும் மக்கள் இந்தியக் கூட்டாட்சியில் வாழ்கின்றனர். அவற்றுள் காலத்தாலும் - கருத்தாலும் சிறந்தவைகளைப் பேசுகின்ற மக்கள் தொகையின் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து இந்திய தேசிய மொழிகள் 14 என்று அரசு முடிவெடுத்துள்ளது. தமிழும் இந்தியத் தேசிய மொழியேயாம். பல்வேறு மொழியினர் வாழும் கூட்டாட்சிக்கு எப்படியும் தொடர்பு மொழி பொது மொழி தேவை என்பதை யாரும் மறுக்க முடியாது. அத்தகு பொது மொழியாக - தொடர்பு மொழியாக - அரசியல் சட்டம் இந்தியைத் தேர்ந்தெடுத்தது. கொள்கையளவில் நமக்கு முரண்பாடோ மறுப்போ இல்லை. ஆனாலும் ஒரு பெரிய நாட்டுக்கு ஒரு மொழிதான் ஆட்சி மொழி இருக்கவேண்டும் என்ற கருத்தில் எவ்வளவு நியாயம்