பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மொழி

247


இருக்கிறது என்பதை நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும். ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட பல மொழிகள் ஆட்சி மொழிகளாக இருக்கின்றனவே. அதுபோல ஏன் நம்முடைய நாட்டில் மொழி இனங்களின் தலைமை மொழிகளையாவது ஆட்சிமொழி ஆக்கக்கூடாது என்று கேட்கத் தோன்றுகிறது.

மனிதனுடைய நாகரிக ஊற்றுக்களின் அடித்தளம் மொழிவழிச் சார்பு, மொழிவழிச் சார்பை இழந்த மனித வாழ்வு, மணமற்ற மலர்களின் குவியலைப் போன்றது. அங்கு வளர்ச்சிக்கும், மகிழ்ச்சிக்கும் மாறுதலுக்கும் உரிய வாய்ப்புக்கள் இல்லாமற் போய்விடுகின்றன. தமிழனுக்கு அவனுடைய தாய்மொழியே அவனுடைய சென்றகாலம் எதிர்காலம் எல்லாம். அவனுடைய மொழி, அவனுடைய நாகரிகம் இவற்றை உலகம் தெரிந்து கொள்ளுகின்ற காலத்திலேயே அவனுக்கு உண்மையான பெருமை ஏற்படும். இவற்றையெல்லாம் இழந்துவிட்டுத்தான், அவன் பாரத நாட்டுக் குடிமகன் ஆகவேண்டும் என்று சொன்னால் அதை ஏற்றுக் கொள்ளுவதில் தமிழர்கள் பெரும்பாலும் சங்கடப்படுவார்கள். பாரத நாட்டின் ஆட்சிமொழியாக இந்தி மட்டும் இருக்குமென்ற கொள்கையை உறுதிப்படுத்த விரும்பினால், மொழி வழி தேசிய இன மாநில ஆட்சிக்கு இன்னும் இன்றிருப்பதைவிட அதிகமான உரிமைகள் தரப் பெற வேண்டும். சோவியத் யூனியனில் இருப்பது போலத் தனிக்கொடியும், உலக நாடுகளின் அவைக்குச் சார்பாளர் அனுப்புவதற்கு உரிமையும் மற்ற தேவைப்படுகின்ற நாடுகளோடு துதும் உறவும் வைத்துக் கொள்ளும் உரிமையும் தரப்பெறுதல் வேண்டும். இத்தகு உரிமைகள் எல்லாம் தமிழனுக்கில்லாமல் தமிழன், இந்தியையும் இந்தியாவையும் ஏற்றுக் கொள்வதற்குத் தயங்குவான். மேலும், இந்தி பேசாத மாநில மக்களின் முன்னேற்றத்திற்கு என்ன உத்தரவாதமிருக்கிறது? இந்தியைத் தாய்மொழியாக உடையவனும், இல்லாதவனும் இந்தியிலேயே அரசாங்கத் தேர்வுகளை