பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

252

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நியாயம் இருக்கிறது. நாம் புரிந்து கொள்ள முடியும். அதற்கு மாறாக எல்லாத் தேர்வுகளையும் இந்தியில் எழுதக் கூடிய ஏற்பாட்டைச் செய்வது நியாயமில்லை. ஆதலால் பொருளறிவு தொடர்புடைய எல்லாத் தேர்வுகளையும் அவரவர் தாய்மொழியிலேயே எழுதக் கூடிய வகையிலேயே இந்திய அரசின் அலுவலர்கள் தேர்வு இருக்க வேண்டும். உடன் இந்திமொழி அறிவுத் தேர்வும் எழுதவேண்டும். இதுவே சிறந்தது. ஆதலால் அரசினர் மீண்டும் தங்களுடைய முடிவுகளை பரிசீலனை செய்ய வேண்டும் என்பது நமது விருப்பம்.

7. யார் வைத்த தீயோ எரிகிறது!

கல்லூரிகளில் தாய் மொழியின் மூலம் பயிற்சி என்ற தூய கொள்கை, ஈன்றெடுத்த அரசின் காலத்திலேயே மரணப் படுகுழியை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது. தாய் மொழியின் மூலம் பயிற்சி என்ற கொள்கை தாய் மொழியின் மீதுள்ள பற்றின் காரணமாக எழுந்ததுன்று என்பதை நாம் தொடர்ந்து வலியுறுத்திக் கூறிவந்துள்ளோம். சிந்தனையைத் தூண்டிச் செழுமைப்படுத்தி நல்லறிவைத் தருவதில் தாய் மொழியைப் போல, வேறு எம் மொழியும் துணைசெய்ய முடியாது. இது மனித, இயற்கையின் அடிப்படை நியதி. தாய் மொழியின் மூலம் பல்வேறு கலைகள் கற்பிக்கப் பெறுவதால் நம்முடைய நாட்டில் சுய சிந்தனை வளரும். தன் வயப்பட்ட அறிவு வளரும். அத்தோடு பாரதப் பெருநாட்டின் மொழிவழி மாநில மக்கள் தம்முடைய மொழி வளர்கிறது என்ற நம்பிக்கை பெறுவர்.

தேசிய ஒற்றுமை பாதுகாக்கப் பெறும் என்ற நம்பிக்கையின் காரணமாக - இந்த நல்லெண்ண அடிப்படையில் தொடங்கப் பெற்ற தாய்மொழி மூலம் பயிற்சி என்ற திட்டம் பொது மக்களாலும் ஆர்வத்தோடு வரவேற்கப்