பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

256

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



ஆட்சியாளர் கொள்கை. அதே காலத்தில், மாநில மட்டத்தில் மாநில மொழிகள் அலுவலக மொழிகளாக இடம் பெற வேண்டும் என்பதும் ஏற்றுக் கொள்ளப் பெற்ற கொள்கை, இந்திய மட்டத்தில் இந்தி வருகிற வேகத்தைப் போல, தமிழ் மாநிலத்தில் தமிழை முழு அளவில் ஆட்சி மொழியாக - அலுவலக மொழியாக இடம் பெறச் செய்ய மாநில அரசு உரிய முயற்சிகளை காலத்தே செய்யாதது வருந்தத்தக்கது. அரசைச் செய்யும்படி தூண்டாதது மக்களின் தவறு. அரசியல் கட்சிகளின் தவறு. மாறாக, தமிழ் பயிற்சி மொழி இயக்கம் படுதோல்வியடைந்தது. தமிழ் பயிற்சி மொழி இயக்கம் வெற்றி பெற்றாலன்றோ தமிழ் ஆட்சி மொழியாக முடியும்? தமிழுக்குப் பாதுகாப்பு கிடைக்க முடியும்! தமிழ் பயிற்சிமொழி இயக்கத்திற்கு ஏற்பட்ட தோல்வி தமிழரின் சிந்தனையைத் தொடவில்லை. அதற்காக அவர்கள் வெட்கித் தலைகுனியவில்லை - அந்தச் செய்தியே செத்துவிட்டது. இன்று அது பற்றிப் பேசுவோரும் இல்லை; எழுதுவோரும் இல்லை.

நடைபெறுகின்ற கிளர்ச்சி தமிழ்ப் பாதுகாப்புக்காகவா ஆங்கிலப் பாதுகாப்புக்காகவா என்பதையே நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதனாலேயே நாமும் அமைதியாகக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பும் நிலையும் ஏற்பட்டன. தமிழ்ப் பாதுகாப்பு இயக்கமாக இருந்தால் மனநிறைவோடு வரவேற்கலாம், பாராட்டலாம். போராட்டத்திற்குத் துணை நிற்கவும் செய்யலாம். இது நம்முடைய கடமை என்பதை நாம் தெளிவாக உணர்கின்றோம்.

அடுத்து ஒரு குறிப்பிட்ட போராட்டத்தை நடத்துவதில் பொறுப்புள்ள தலைவர்கள் பொதுமக்கள் முன்நிற்க வேண்டும். அதிலும் நிலைமைகளைச் சமாளிக்கும் ஆற்றல் உடையவர்கள் கிளர்ச்சிகளை நடத்த வேண்டும். ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து விடுதலைப் போராட்டம்