பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மொழி

257


நடத்திய அண்ணல் காந்தியடிகள், எதிர்ப்பு மறியல் போராட்டத்திற்கு வினோபாஜி, ராஜாஜி போன்ற பெரு மக்களையே தேர்ந்தெடுத்தார். போராட்டம் திசை தவறிச் செல்லாமல் அமைதியாகச் சென்றது. ஓரிரண்டு மறச் செயல்கள் நிகழ்வுற்றாலும் போராட்டத்தின் முழுவடிவம் கொலை, கொள்ளைகளினின்றும் விடுபட்ட அமைதிப் புரட்சியாகவே இருந்தது. இப்பொழுதும் இளந் தலைமுறையினரைக் கிளர்ச்சிக்கு இழுக்காமல் அரசியல் சமுதாயம் ஆகியவற்றைச் சார்ந்த தலைவர்கள், பெரியவர்கள் போராட்டத்தை நடத்த முன்வந்திருக்க வேண்டும். அவர்கள் அவ்வாறு செய்யாதது வருந்தத் தக்கதேயாகும்.

அரசாங்கம், அதுவும் மக்களாட்சி அரசாங்கம் மக்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்புக் கொடுப்பது இன்றியமையாதது - கடமையுங்கூட மக்களின் இந்தி எதிர்ப்புணர்ச்சியை மாநில மத்திய அரசுகள், முழுமையாகக் கணக்கில் எடுத்துக் கொண்டு மாற்று வழிவகை காணாதது ஆழ்ந்த கவலையைத் தருகிறது. ஒரு மொழியைச் சார்ந்த மக்கள் விரும்பாத ஒன்றை எந்தப் பெயர் சொல்லித் திணித்தாலும் வெறுப்புணர்ச்சியே வளரும். என்ன அவசரம் அறுபத்தைந்தில் இந்தியை ஆட்சிமொழியாக்கிவிட வேண்டுமென்று? அதற்காக டில்லியில் ஒரு விழா ஏன்? நியாயமற்ற முறைகள் நியாயமற்ற பலாபலன்களையே தோற்றுவிக்கும். இதை மத்திய அரசின் ஆட்சித் தலைவர்கள் உணராதது விந்தையாக இருக்கிறது - ஆங்கிலம் நீடிக்க வேண்டும் என்று மக்கள் விரும்பினால் நீடிப்பது அவசியம்தானே? இதற்கிடையில் "வார்த்தை ஜாலங்கள்” நடத்துவது நியாயமா? "May" என்று போட்டாலும் "Shall" என்று போட்டாலும் ஒரே பொருள் தான் என்று அரசு விவாதிக்குமானால் "Shall" என்றே போட்டுவிட்டுப் போகலாமே! மத்திய அரசு இத்தகு பிரச்னைகளில் பிடிவாதமாக இருப்பது விரும்பத் தக்கதன்று.

பதினான்கு மொழிகள் தேசீய மொழிகளாக வழங்குகிற நாட்டில் - பூரண மக்களாட்சி நிலவ முடியுமா?