பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

262

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்று சொன்னால் அதை எப்படி நம்ப முடியும்? அல்லது அது எப்படி உத்திரவாதமாக முடியும்? அல்லது நீதி மன்றங்களில் தான் செலாவணியாகுமா?

இந்தியாவின் அலுவலக மொழியாக இந்திய தேசீய மொழிகள் பதினான்கும் இடம்பெறுவது நியாயம். நீதியும் கூட பூர்ண மக்களாட்சி மரபுக்கும் ஏற்றதும்கூட. ஆனாலும் இன்றைய நாட்டின் பொருளாதர சூழ்நிலை இந்த விரிவான அடிப்படையை ஏற்றுக் கொள்ள இடம் தராது என்பதற்கு நாம் முற்றிலும் உடன்படுகின்றோம். ஆனாலும் எதிர்கால இலட்சியம் இந்திய தேசீய மொழிகள் அனைத்தையும் இந்தியாவின் அலுவலக மொழியாக ஆக்குவதாகவே இருக்க வேண்டும்.

இந்த நிலைமை உருவாகின்ற காலம் வரையில் இந்தியோடு ஆங்கிலம் காலவரையறையின்றி இந்தியாவின் இணை ஆட்சி மொழியாக சட்டபூர்வமாக உரிமை பெற வேண்டும். ஆனாலும் ஆங்கிலம் நீண்ட நெடிய நாட்களுக்கு நீடிப்பதென்பதும் நல்லதல்ல. உண்மையை உள்ளவாறு சொன்னால் தற்காலிகமாக ஆங்கிலம் நீடிப்பதில்கூட இந்தி பேசாத மாநில மக்களின் பெரும்பாலோர் நலன் பாதுகாக்கப்பட்டதாக ஆகாது. ஏனெனில் தமிழ்நாட்டிலும் கூட ஆங்கிலம் அறிந்தவர்களின் எண்ணிக்கை சதவீதம் மிகக் குறைவே, தெரிந்தவர்களிலும்கூட படிப்பறிவு உடையவர்களே அதிகம். மொழியறிவுடையவர்கள் மிக மிகக் குறைவு. நாம் இப்படிக் கூட ஒரு கணக்குப் போட்டு பார்க்க விரும்புகிறோம். இந்திக்கு எதிராக ஆங்கிலத்திற்கு சாதகமாக நடைபெறும் போராட்டம் தமிழகத்தில் முன்னணிச் சமுதாயத்தினராக ஆங்கிலத்தைக் காலத்தில் பயின்று ஆங்கிலத்தின் மூலம் உத்தியோக வாய்ப்புக்களை ஏகபோகமாகப் பெற்று அனுபவிக்கின்றவர்கள் தங்களுடைய நலன்களைத் தொடர்ந்து காப்பாற்றிக் கொள்ளத்தான் செய்கிறார்களோ என்பது நமது ஐயப்பாடு. ஏனெனில் இந்தி