பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

264

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இந்திய ஒருமைப்பாடு உணர்ச்சி பூர்வமானதாக வளராது அமையாது. எப்படியும் இந்தியின் ஆதிக்கத்தைப் பற்றிய தவறான எண்ணங்கள் இந்தி பேசாத மாநில மக்களின் மனதைவிட்டு அகல வேண்டும். இந்தியாவில் இந்தியப் பேரரசில் சமஉரிமைகள் பெற்ற நிலையில் இந்திய தேசிய மொழிகள் அனைத்தும் விளங்க வேண்டும். அதுவே இந்தியாவின் பொற்காலம்.

11. அமைதி காப்போம்

இந்தி ஆட்சி மொழிச் சிக்கல் தொடர்பாக, தமிழகத்தில் - தென்னகத்தில் வன்முறைச் செயல்களோடு கூடிய கலவரங்கள் நிகழ்வுற்றன. இத்தகு கலவர நிகழ்ச்சிகளுக்குப் பூரண பொறுப்பு மாணவர்களே என்று நாம் நம்பவில்லை. சமூக விரோத தீய சக்திகள் இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு ஆடித் தீர்த்து விட்டார்கள். நாட்டு வரலாற்றில் களங்கத்தை ஏற்படுத்தி விட்டார்கள். மன்னிக்க முடியாத குற்றம், வன்முறைச் செயல்கள் தலைவிரித்தாடியபோது, அந்த அறைகூவலைத் திறமையாக ஏற்றுச் சமாளித்த தமிழக முதலமைச்சர் மேதகு பக்தவச்சலம் அவர்களுக்கும், உள்துறை அமைச்சர் மேதகு கக்கன் அவர்களுக்கும், திறம்படச் செயலாற்றிய நிருவாக உறுப்பினர்களுக்கும் நாடு மிகவும் கடமைப்பட்டிருக்கிறது.

மொழிக் கிளர்ச்சியின் முடிவில் மாநில அரசும் மத்திய அரசும் அறிவித்திருக்கும் முடிவுகள் மனநிறைவைத் தருவதாகவே இருக்கின்றன. குறிப்பாகப் பலதுறைகளில், 1963 - ஆம் ஆண்டில் குன்றக்குடியில் நடைபெற்ற தமிழ்ப் பாதுகாப்பு மாநாட்டின் தீர்மானங்களை ஒட்டியே அமைந்துள்ளன. அதுகுறித்து நாம் மகிழ்ச்சி அடையவும் பெருமை கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது.