பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மொழி

265



பல்வேறு மொழிகள் பேசும் நாட்டில் ஒருமொழி மட்டும் உடனடியாக அல்லது வேகமாக ஆட்சி மொழியாவது அம்மொழியைச் சாராத மக்களிடத்தில் அதிருப்தியைத் தோற்றுவிப்பது இயற்கையேயாகும். அதுவும் மொழி வழி உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் இயக்கங்கள் உள்ள நாட்டில் மேலும் இயற்கையாகும். தாய்மாழிப் பற்று மனிதனின் குருதியோடு கலந்த ஒன்று. அந்த உணர்ச்சியைக் கட்டுப்படுத்த மொழி, சமயம் போன்றவற்றை விஞ்ஞானப் பார்வையோடு பார்ப்பவர்களுக்கே சாலும். இந்தியாவின் அலுவலக ஆட்சி மொழிகளாக இந்திய தேசிய மொழிகள் பதினான்குமே இருப்பது நல்லது; நாமும் அதையே விரும்புகின்றோம். ஆனாலும், இன்றைய இந்திய நாட்டின் பொருளாதாரச் சூழ்நிலையில் 14 மொழிகளையும் அலுவலக மொழிகளாக்க முடியுமா என்பதையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மக்களின் நல்வாழ்வுக்குத்தான் மொழியும் நிர்வாகமுமே தவிர அதற்கு மாறாக, நிர்வாகத்தைச் சுமையாக்கி, மக்களை வளமற்ற வறுமை நிறைந்த வாழ்க்கைக்கு அழைத்துச் செல்வதில் என்ன பயன்? ஆதலால் எதிர்கால இலட்சியமாக 14 மொழிகளையுமே அலுவலக மொழிகளாக்கலாம் என்பதை நாம் கொள்ளலாம்; கொள்ள வேண்டும். இந்தியப் பேரரசு உரிய காலத்தில், அதைச் செய்வதாக உத்தரவாதம் தரவேண்டும். இந்த இடைவெளிக் காலத்தில் இந்தி, இந்தியாவின் அலுவலக மொழியாக இருப்பதை, ஆங்கிலம் இணை ஆட்சி மொழியாக நீடிக்கிறது என்ற அடிப்படையில் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். எப்படியும் இந்திய மொழிகளில் ஒன்றுதான் இந்தியாவின் அலுவலக மொழியாக இருக்க வேண்டும்; இருக்க முடியும். ஆங்கிலத்தை மட்டும் அலுவலக மொழியாக்கக் கோருவது தேச பக்தியுமில்லை; நியாயமும் ஆகாது; நீதியும் ஆகாது. அப்படி ஆங்கிலத்தை மட்டும் ஆட்சி மொழியாக்கக் கேட்பது ஏற்கனவேயே ஆதிக்கம் பெற்றிருந்த சமுதாயத்தின் ஆதிக்கத்தை, தொடர்ந்து காப்பாற்றவே பயன்படும். மத்திய