பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மொழி

267


காணவும் கலந்து பேசி மகிழவும் உணர்வுகளைப் பரிமாறிக் கொள்ளவும் கிடைத்த இவ்வாய்ப்பினை நினைத்து மகிழ்கின்றோம். வாய்ப்பை வழங்கிய திராவிடர் கழகத்தினருக்கு நமது நன்றி, பாராட்டு, வாழ்த்துக்கள்.

மொழியின் பயன்

மனிதன், மற்ற உயிர்களினின்றும் வேறுபடுகிறான், ஏன்? அவன் சிந்திக்கும் பிராணியாக இருப்பதுதான் காரணம். மனிதன் சிந்தனைக்குரியவன்; சிந்தித்தற்குரியவன். சிந்திக்கும் ஆற்றலும், அறிவும் மனிதன் பெறாவிடில் அவன் விலங்கேயாம். சிந்தனையைத் தூண்டுவது உணர்வு; உணர்வை உந்திச் செலுத்துவது புலன்கள்; புறநிகழ்வுகளைத் துய்க்கும் நிலை; (அனுபவம்); புலன்களின் துய்ப்பு நிலையை இயக்கித் தொழிற்படுத்துவன பொறிகள். அவற்றில் நுண்ணிய திறமுடையாரைக் கண்கள் இயக்கும். அங்கனம் அல்லா தாரைச் செவிச் செல்வமாகிய கேள்வி இயக்கும். கேள்வியைப் புலனுணர்வுக்கு எளிதாக்கித் தருவது தாய் மொழி, ஆதலால் தாய்மொழியின் வாயிலாகத்தான் சிந்தனை தோன்றும்; சிந்தனை சிறக்கும்; ஒன்று பலவாக விரியும். அறிவு தலைப்படும்; தொழிற்படும்; தெளிவு நிலை எய்தும், தெளிந்த அறிவு ஆள் வினையிற் செலுத்தும். ஆதலால் தாய்மொழியே, மனிதனின் உயிர்! மொழி, கருத்தைத் தெரிவிக்கும் கருவியே என்ற கருத்து தவறானது. உண்மைக்குப் புறம்பானது. கருத்தைத் தெரிவிக்க மொழி பயன்டுவது உண்மை; கருத்தை எந்த மொழியிலும் வெளிப்படுத்தலாம். அதற்குத் தாய் மொழியே வேண்டாற்பாலதன்று. ஆனால், தாய் மொழியில் வெளிப்படுத்தினால் கேட்பார் மகிழ - கேளாரும் வேட்ப, உணர்வு சிறக்கத் தெரிவிக்கலாம். அது மட்டுமின்றி சராசரி மனிதருக்கும் தெரிவிக்கலாம். தாய்மொழியின் பணி கருத்தை எதிரொலிக்கப் பயன்படுவது மட்டுமன்று. அதைவிடச் சிறந்த