பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

268

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பணியைச் செய்கிறது. அக்கருத்தை உருவாக்குவதே தாய் மொழியின் பணிதான். ஓர் இனம் தெளிவான சிந்தனையைப் பெற, அறிவினை வளர்த்துக் கொள்ள, உணர்வுகளைப் பரிமாறிக் கொள்ளத் தாய்மொழியே துணை செய்கிறது. அந்நிய மொழியால் இவற்றைச் செய்ய இயலாது. வளரும் அறிவினை வழங்கவும், செழித்த உணர்வினைத் தரவும் தாய்மொழியினாலேயே இயலும் முடியும்.

தாய்மொழி

தாய் மொழியின் வளத்திற்கு ஏற்ப அம்மொழியைப் பேசும் மக்கள், வளமான சிந்தனையைப் பெறுவர்; தேர்ந்து செய்யும் தெளிவினையும் பெற்று அரிய வினைகள் ஆற்றுவர். தாய்மொழி வழி சிந்தித்து வாழும் மக்கள் அறியாமையை அறவே அகற்றி வெற்றி காண்பர். அதனால் வறுமையும் இருக்காது, ஐரிஷ் மொழியாகிய "கெய்லிக்" வளர்ச்சியில்லாமல் படுகுழியில் வீழ்த்தப்பட்டுக் கிடந்தபோது, ஐரிஷ் மக்கள் அடிமைப்பட்டுக் கிடந்தனர். 'ஐரிஷ்' மொழியை அறிஞர்கள் கவிதைகளால், காவியங்களால் ஒப்பனை செய்து பொது மக்களிடத்தில் கொண்டு சென்று, பொது மக்களை விழிப்படையச் செய்தார்கள். அயர்லாந்து மக்கள் மாட்சிமை மிக்க தம் தாய்மொழியின் மீது பற்றுக் கொண்டு வணங்கினர். அதனால், அவர்களிடத்தில் தன்னம்பிக்கை பிறந்தது; சுய மரியாதை உணர்ச்சி தோன்றியது. அந்நியர்கள், ஐரிஷ் மக்களை மதிக்கத் தொடங்கினர்; சுதந்திர வாயிலும் திறந்தது. நாட்டு விடுதலைக்கு நாட்டு மொழியின் விடுதலையே துணை செய்யும். இஃது அயர்லாந்து இருபதாம் நூற்றாண்டு வரலாற்றின் படிப்பினையாகும்.

நம்முடைய நிலை என்ன? இந்த நூற்றாண்டில் நமது இலக்கியம் பெற்றிருக்கிற மறுமலர்ச்சி என்ன? நாம் நமது பழந்தமிழ் இலக்கியத்தின் செய்திகளைச் சாதாரண மக்களிடத்தில் கொண்டு சென்றிருக்கிறோமா? எந்த