பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

270

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பைந்தமிழ் அன்னையை ஏற்கும்; உலகம் ஏற்கும், தமிழ்த் தாயை நாம் வளர்க்கும் பணியே இந்தி எதிர்ப்புப் பணியில் எப்பணிக்கும் முதற் பணியாகும்.

தமிழின் பெருமை

தமிழ் காலத்தால் மூத்தது. தமிழ், காலஎல்லை வரலாற்றறிவையும் கடந்தது. வரலாற்று அறிவு எல்லை கி.மு. 10,000 என்பது கருத்து. இன்றுள்ள நூல்களில் தொன்மையானது தொல்காப்பியம். தொல்காப்பியத்தின் காலம் கி.மு. 3500க்கு மேல் கி.மு. 5000 ஆகும். தொல்காப்பியம் இலக்கண நூல். இலக்கியம் தோன்றிய பிறகே இலக்கணம் தோன்றும், தொல்காப்பியம் என்ற இலக்கண நூல் தோன்ற பல நூறு ஆண்டுகள் தோன்றிச் சிறந்த இலக்கியப் பின்னணி இருந்திருக்க வேண்டும். இலக்கியத் தோற்றத்திற்கு அடிப்படையாகிய சிந்தனைத் திறன், செயல் திறன் ஆகியன தோன்றி வளர்ந்த கால எல்லை மேலும் கடந்து செல்கிறது. உலகின் மொழிகள், மொழிக்கு மட்டுமே இலக்கணம் பெற்றுள்ளன. இலக்கண வரம்பு இல்லை. ஆனால் தமிழ் இலக்கணம் வரம்பினைப் பெற்றுச் சிறந்து விளங்கும் மொழி, அஃதன்றி மொழியைப் பேசும் மக்களின் வாழ்க்கைக்கும் இலக்கணம் கண்ட ஒரே மொழி தமிழ்தான், தமிழர்க்கு, வாழ்க்கைக்கு இலக்கணம் வேண்டும் என்ற அறிவு சிறந்து பல ஆயிரம் ஆண்டுகளாயிற்று. தமிழ்ச் சொற்களின் அமைப்பும், செறிவும் வேறு எம்மொழிக்கும் இல்லாதன. சொல்லளவிலேயே பருவம், நிலை முதலியன உணர்த்தும் சொற்கள் தமிழிலேயே உண்டு. வாய்மை, உண்மை, மெய்ம்மை போன்ற பொருள் நிறைந்த சொற்கள் தமிழிலேயே உள்ளன. தமிழ்ச் சொல்வளம் பெருமைப்படுதற்குரியது. “வலவன் ஏவா வான் ஊர்தி.” “இரும்பு தரும் மனத்தேனை ஈர்த்தது” என்ற வழக்குகள் அறிவியல் சிந்தனைத் தொடர்புடையன. இச்சிந்தனை தொடர்ந்து வளர்ந்திருந்தால் இன்று விண்வெளிக் கலம்