பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

272

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மேலெழுந்த வாரியாகப் படிந்துள்ளது" என்றார். அமரர் பண்டித நேரு, பாரதம் ஒரு நாடானது ஆங்கில ஆட்சியில் தான். ஆங்கில ஆட்சிக்கு முன்பு, பல வட இந்திய வல்லரசுகள் முயன்றும் தமிழகத்தை உள்ளடக்கிய பேரரசு தோன்றவில்லை. தமிழரசர்கள் வட இமய எல்லைவரை சென்று வெற்றி பெற்றிருப்பினும் அவர்கள் ஆதிக்க அரசு அமைக்கவில்லை. அஃது அவர்கள் நோக்கமன்று. பல்வேறு வேற்றுமைகள் உட்குழுச் சண்டைகள் இவைகளால் நாட்டுமக்கள் வலிமை இழந்திருந்த நிலை ஆங்கிலேயரின் ஆதிக்கத்திற்குத் துணையாயமைந்தது.

பிற்காலத்திய இந்திய அரசர்கள் மக்களை வளர்க்காமல் இன்பக் களியாட்டங்களிலே ஈடுபட்டு விட்டனர். அதனால் அந்த மன்னர்கள், அறிவையும், வீரத்தையும், ஞானத்தையும் இழந்து நாளையும் கோளையும் நம்பி வறட்சித் தன்மையுடைய அயல்வழி சமயப் புரோகிதர்களின் வலையில் சிக்கினர். இந்தக் கீழ்மைகளே நாடு அடிமைப்படுவதற்கு ஆயத்தம் செய்திருந்தன. ஆங்கிலேயருடைய விஞ்ஞான அறிவும் புதிய கருவிகளும் நாட்டை அடிமைப்படுத்துவதற்குத் துணை செய்தன. ஆங்கிலேயர்கள் தம் பால் உள்ள திறமையினால் இந்தியாவை ஒரு நாடாக்கினர்.

சர், ஜான் ஸ்ட்ரேசி என்பவர் 1903 ஆம் ஆண்டில் எழுதிய அறிக்கையில் “இந்தியா என்ற ஒரு நாடு இல்லை. பல நாடுகளின் கூட்டத்தைக் கொண்ட பெரு நிலப்பரப்புக்கு நாம் (ஆங்கிலேயர்) கொடுத்த பெயர்தான் இந்தியா என்பது” என்று எழுதியுள்ளார். ஆனாலும் ஆங்கிலப் பேரரசால் நாம் அடைந்த பெரு நன்மை இந்தியா ஒரு நாடு என்ற உருவத்தை பெற்றதுதான். உலகம் நெருங்கி வரும் இந்தக் காலத்தில் இந்தியா ஒரு நாடாக இருப்பது தவிர்க்க முடியாதது மட்டுமல்ல; அவசியமும் கூட, இன்றைய உலக அரங்கில் வலிமை பெற்ற பெருநாடுகள் தாம் வளர்ந்து வாழ முடியும்.