பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13

தளத்தைச் சரியாக அடையாளம் காட்டுகின்றார்கள். ‘எங்கே போகிறோம்?' என்ற கட்டுரைகளின் தொகுப்பு. சமூகத்திற்கு எல்லாத் துறைகளிலும் சரியான பாதையை அடையாளம் காட்டுகின்றது.

'மண்ணும் மனிதர்களும்' ஆனந்தவிகடன் வார இதழில் நிறைவுக் காலத்தில் எழுதப்பட்ட தன்வரலாற்றுத் தொடர்! முழுமையான வரலாறு கிடைக்கும்முன் காலம் அடிகள் பெருமானை நம்மிடமிருந்து பிரித்துவிட்டது. இந்தத் தொடர் வெளிவர அடித்தளமாய் விளங்கிய உளம்கவர் கயல் தினகரன், இந்த வரலாற்றினைப் பதிவு செய்த மரு. பரமகுரு ஆகிய இருவரும் பாராட்டுக்குரியவர்கள். மகாசன்னிதானத்தின் இளம் பருவத்திலேயே குருதியில் கலந்த தொண்டுணர்வு, நாய் இறந்து கிடந்த ஆலயத்தினைத் தூய்மைப்படுத்தி. பூசனை செய்ய வைத்தது: தமிழ் செழிபாட்டு நெறியைச் சமய உலகத்தில் நிலை நிறுத்தியது புயல் நிவாரணப்பணிகள் ஆற்றியது. இது சமய சமூக மேம்பாட்டுக்குத் தம்மையே அர்ப்பணித்த தமிழ் ஞானியின் வரலாறு!

'கோவிலைத் தழுவிய குடிகள்; குடிகளைத் தழுவிய கோவில்!', 'கடவுளைப் போற்று! மனிதனை நினை!' என்பவை தான் அருள்நெறித் தந்தையின் வாழ்வியல் தாரக மந்திரங்கள்! ஆன்மிகத்தின் அடித்தளத்தில் நின்று கொண்டு மனிதத்தை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டார்கள். மனிதத்தை மறந்து கடவுளைப் போற்றுதல் ஆன்மிசம் ஆகாது! கடவுளை மறந்து மனிதத்தைச் சிந்திப்பது வாழ்வியல் ஆகாது; கடவுளைப் போற்ற வேண்டும்; மனிதனை நினைக்க வேண்டும்.

அற்புதச் சிந்தனைகள் அடங்கிய இந்த அரிய தொகுப்பு நூலின் தொகுப்புப் பணியில் தம்மை அர்ப்பணித்துப் பணியாற்றிய அருமை நல்லுள்ளங்கள் இராமசாமி தமிழ்க் கல்லூரி முன்னாள் முதல்வர் தமிழாகரர் தெ. முருகசாமி அவர்களுக்கும், ஆதீனக் கவிக்குயில் அருமை மரு. பரமகுரு அவர்களுக்கும் நெஞ்சுநிறை நன்றிகள்; பாராட்டுக்கள்; வாழ்த்துக்கள்! இந்நூலுக்குச் சீரிய அணிந்துரை வழங்கிய தவத்திரு ஊரன் அடிகள் அவர்களுக்கு நன்றி! பாராட்டுக்கள்! இந்நூலைச் சிறப்பாகப் பதிப்பித்துள்ள 'பதிப்புச்செம்மல், தமிழவேள்' பதிப்புப் பணியில் முத்திரை பதித்த வித்தகர், மணிவாசகர் பதிப்பகம் கடியாப்பட்டி ச. மெய்யப்பன் அவர்களுக்கு நெஞ்சுநிறை பாராட்டுக்கள்; வாழ்த்துக்கள்; நன்றி!