பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மொழி

275



அதனால் பொருளும் வேறுபடுகின்றது. நாலுபேர் இந்தி மொழி பேசுவோர் சேர்ந்தால் குழப்பத்தைத் தவிர்க்க மொழி பெயர்ப்பாளர் தேவை. ஆதலால் இந்தி மொழி, பேசுவோரிடத்திலேயே குழப்பம் உள்ளது. இந்தக் குழப்பத்தை நாட்டுடைமையாக்குவதில் என்ன பயன்? இந்த இந்தி மொழிகளிலே எந்த இந்தியைத் தென்னாட்டார் ஏற்பது? அல்லது கற்பது? இந்த இந்தி மொழியை மென்மை தழுவிய தமிழினத்தாரின் - இசை தழுவிய தமிழினத்தாரின் மென்மைக் குரல் எப்படி உச்சரிக்கும்? மேற்கூறிய எந்த வொரு இந்தி மொழியைக் கற்றாலும் வடவுலத்தில் உள்ள அனைத்து மக்களுடனும் கலந்து பேசி மகிழ முடியாதே.

வடக்கே வாழும் பல கோடிக்கணக்கான மக்களால் இந்தி, லந்தி, பஞ்சாபி, குஜராத்தி, ராஜபுதானி, குமோனி கடுவாலி, நேபாலி, உரியா, பங்காளி, மராட்டி, சிணா, காசுமீரி, கோகிஸ்தானி, சித்ராலி, திராகி, பனஷ, கலாஷா, கவர்படி இன்னோரன்ன மொழிகள் பேசப்பெறுகின்றன.

தமிழைப்போல் உயிர்ப்புடன் வளர்ந்துள்ள வங்க மொழியும் இருக்கிறது. இந்த மொழிகளையெல்லாம் கற்காமல் எப்படி வடபுலத்து மக்களோடு உறவு கொள்ள முடியும்?

பெரும்பான்மையோரின் மொழியா?

இந்தி மொழியைத் தெரிந்தவர்கள் பாரத நாட்டு மக்கள் தொகையில் பெரும்பான்மையர் என்பது நிறைவான உண்மையன்று. பாரத நாட்டு மக்களில் இந்தி பேசத் தெரிந்தவர்கள் 27 விழுக்காடுதான். இந்த 27 விழுக்காட்டிலும் இந்தியைத் தாய்மொழியாக உடையவர் எண்ணிக்கை எவ்வளவு? இந்துஸ்தானியைத் தாய்மொழியாக உடையவர் எண்ணிக்கை எவ்வளவு? இந்தியின் எந்தவொரு கிளை மொழியையும் தாய்மொழியாகப் பெறாமல் வழக்கத்தின் காரணமாகப் பேசத் தெரிந்தோர் எத்தனைபேர்