பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மொழி

279


வெற்றி பெறவே முடியவில்லை. உடன்பாடுதான் செய்விக்கப் பெற்றது. தழுவிச் செல்லும் மனப்போக்கினால் இந்தி எதிர்ப்பு உணர்ச்சி முனை மழுங்கிவிட்டது.

காங்கிரஸ் என்ற பேராயக் கட்சியினரான தென்னகத் தலைவர்கள் இந்தி எதிர்ப்பு உணர்ச்சி பெற்றிருந்தும் உடன்பாட்டின் வயப்பட்டதால் இந்தியை ஆட்சிமொழியாக ஏற்றுக் கொள்ளத் தலைப்பட்டனர். இந்தியைத் தாய் மொழியாக உடையவர்களிடம் தென்னகத்தார் ஆங்கிலத்தை இணை ஆட்சிமொழியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று மடியேந்திப் பிச்சை கேட்டனர்.

இந்தியல்லாத பிறமொழிகளைத் தாய்மொழியுடைய மாநிலத்தார் உரிமையிழந்த நிலையில் பிறந்த உடன்பாட்டை மையமாகக் கொண்டு பாபு இராசேந்திர பிரசாத் "பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் நமது வரலாற்றிலேயே முதன் முறையாக இப்போதுதான் இந்திய நாடு முழுவதும் எல்லா அரசு நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்துவதற்காக ஒரே மொழியை நாம் ஏற்றுக் கொண்டிருக்கின்றோம்" என்று மகிழ்ந்து கூறினார்.

இங்ஙனம் கூறியது உண்மையன்று என்பதை வரலாற்று நிகழ்வுகளுக்குப் பின் நிகழ்ந்தவைகளே எடுத்துக் கூறுகின்றன. ஆதலால் "இந்தி மொழியே பாரதத்தின் ஆட்சி மொழி" என்று உரிமையைப் பெற்றுவிட்டது. பாரதத்தின் துணை ஆட்சிமொழியாக ஆங்கிலம் பதினைந்து ஆண்டுகள் நீடிக்கும். ஆங்கிலத்தை நாடாளுமன்றத்தின் சட்ட நடவடிக்கைகள் மூலம் நீடிக்கவும் செய்யலாம்! நீக்கவும் செய்யலாம்! அதே போழ்தில் மாநிலங்களின் தாய்மொழிகள் ஆட்சி மொழியாக ஆவதற்குரிய கால வரையறைகள் ஏதும் நிர்ணயம் செய்யப் பெறவில்லை. ஆக இந்தியாவின் ஆட்சி மொழிச் சிக்கலில் தமிழை முன்னிலைப்படுத்தத் தமிழகம் தவறிவிட்டது.