பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

282

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஆனால் நாட்டுமொழி வரிசையில் சேரவில்லை. எப்படி இந்தியைத் தெரிந்தவர்கள் - பேசுபவர்கள் வடக்கேயுள்ள மாநிலங்களில் சிதறி இருக்கிறார்களோ அதைப் போலவே ஆங்கிலம் தெரிந்தவர்கள் பேசுபவர்கள் - படித்தவர்கள் நாடு முழுவதும் பரவி இருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் இந்தி பேசுகிறவர்கள், இமயம் முதல் குமரி வரை பரவியிருக்கவில்லை.

ஆனால் ஆங்கிலம் பேசுபவர்கள் பாரத துணைக் கண்டம் முழுவதும் பரவியிருகிகிறார்கள். இன்று இந்தியத் துணைக்கண்டத்தை இணைத்து நிற்கும் தொடர்புமொழி உண்மையில் ஆங்கிலமே! ஆதலால் பாரத நாட்டின் நாட்டு மொழிகளில் ஒன்றாக ஆங்கிலம் இடம் பெற வேண்டுவது அவசியம். அது பாரத நாட்டு மக்களுக்கு நல்லது. இந்திய நாட்டு மொழிகளில் ஒன்றாக ஆங்கிலம் இடம் பெறுவது தவிர்க்கமுடியாதது மட்டுமன்று; இன்றியமையாமையும் கூட, இந்தி எதிர்ப்பில் ஆங்கிலம் இணையாட்சி மொழி என்ற கொள்கை வெற்றி பெறவில்லை.

ஆங்கிலம் பெற்று பிழைத்து வருவதெல்லாம் கால நீட்டிப்புத்தான். ஆங்கிலத்திற்குக் கால நீட்டிப்பைப் பெற்று இந்தி பேசாதார் மனநிறைவு பெறுவது தற்கொலைக்குச் சமம். அடுத்த தலைமுறைக்குச் செய்து வைக்கும் கேடு! எந்தவொரு மொழியிலும் ஓர் இனம் சிந்திக்கவும் அறிவின் திறனைப் பெறவும் பல தலைமுறை பிடிக்கும். ஆதலால் இந்திய ஆட்சிமொழிச் சிக்கலை இந்தத் தலைமுறையில் தீர்வு காணாது அடுத்த தலைமுறைக்கு விடுவது இந்தத் தலைமுறைக்குப் பழியைத் தரும்.

இந்தி வந்தால்...

இந்தி ஆட்சிமொழித் தகுதியைப் பெற்ற காலத்திலிருந்து நடுவணரசும் இந்தியைத் தாய்மொழியாகவுடைய மாநில அரசுகளும் முறையாகத் திட்டம் தீட்டி வளப்படுத்தி