பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

284

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கூடுதலாலும் காலம் நீடிப்பாலும் மனமும் மூளையும் சோர்வடைந்து விடுகின்றன.

இதனால் பலர் புரிந்து கொண்டு தெளிவு பெற முடிவதில்லை. மனப்பாடம் செய்து தேர்ச்சி பெறுகின்றனர். இங்ஙனம் தேர்ச்சி பெற்றவர்களில் பலர் அறிஞர்களாக விளங்குவதில்லை! உருப்போடும் பொறிகளாகவே விளங்குகின்றனர். மனப்பாடப் படிப்புக் கல்வியில் ஆர்வத்தைத் தருவதில்லை; கசப்பையே தோற்றுவிக்கிறது.

அதன் காரணமாகவே கல்வி நிலையங்களில் அமைதியின்மை. இன்று சோவியத் ஒன்றியம் அறிவியல் வளர்ச்சியில் அரிய சாதனைகள் செய்து வருகிறது. இது எப்படி முடிந்தது? ஆங்கிலத்தின் மூலமா? இல்லை, சோவியத் ஒன்றியத்தில் நாட்டு மொழிகள் பயிற்று மொழிகளானமையே காரணம்.

சோவியத் ஒன்றியத்தின் நாட்டு மொழிகள் பல்கலைக் கழகங்களில் பயிற்று மொழிகளாக இடம் பெற்றுள்ளன. அதனாலேயே சோவியத் ஒன்றியம் ஒளிமிக்குடையதாயிற்று. இறந்த மொழியாகக் கருதப்பெற்ற யூதர்களின் தாய்மொழியாகிய எபிரேய மொழியைப் பயிற்று மொழியாக்கி இசுரேல் வளர்ந்துள்ள வளர்ச்சியை யார் மறுக்க முடியும்?

சப்பான், சீனம் முதலிய நாடுகளின் வளர்சசியும் அந்நாட்டு மொழிகள் பயிற்று மொழிகளாக இருப்பதனாலே தான் என்ற உண்மையை ஓர்க, உணர்க! தாய்மொழியின் மூலம் அனைத்துத் துறைகளையும் பயின்றால்தான் சிந்தனைத் திறனும் படைப்பாற்றலும் கிடைக்கும். அன்னிய மொழியின் மூலம் பயிலும் கல்வி ஏட்டுச் சுரைக்காயேயாம்.

இந்தி பேசப்பாடாத மாநிலங்களின் மக்கள் போராடிப் போராடி ஆங்கிலத்திற்குத்தான் உயிர்ப் பிச்சை அளித்தனர். தாய்மொழிக்கு உயிர்ப்புத் தேடவில்லை; தேட நினைக்கவில்லை. இந்தியல்லாத மாநிலங்கள்