பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மொழி

285


தாய்மொழியில் அரசுத் துறை நடவடிக்கைகள் அனைத்தும் செய்ய இயலவில்லை.

கல்வியிலும் அதே நிலைதான். மாநிலத் தாய்மொழிகள் வளர நடுவணரசு வழங்கும் நிதி உதவியோ இல்லையென்று சொல்லாமல் கிள்ளிக் கொடுத்ததுதான். இந்தியை வளர்ப்பதற்கோ பாரத நாட்டு மக்களின் வரிப்பணம் நிறையச் செலவழிக்கப்படுகிறது.

நேருவின் உறுதிமொழி

1959–இல் நாடாளுமன்ற விவாதத்திற்கு வந்த ஆட்சிமொழிச் சிக்கல் குறித்து ஆய்வுக்குழு அறிக்கை மீது அமரர் பண்டித நேரு, ஓர் உறுதிமொழி அளித்தார்.

'இந்தி திணிக்கப்படக் கூடாது. இந்தி திணிக்கப்படாது என்று நான் சொல்வதன் கருத்து அதுதான். சென்னையோ, ஆந்திரமோ, கேரளமோ, வங்கமோ வேறு எந்த மாநிலமோ தங்கள் மீது இந்தி திணிக்கப்படுகிறது என்று கருதக்கூடிய வகையில் ஒரு மொழியை அந்த மாநிலங்களின்மேல் திணிக்க நான் விரும்பவில்லை. தங்கள் மீது அழுத்தம் செலுத்தப்படுகிறது அல்லது திணிக்கப்படுகிறது என்று மாநிலங்கள் கருதினால் அம்மொழியை நான் அம் மாநிலங்களின் மீது திணிக்க விரும்பவில்லை. தமிழகம் கட்டாய இந்தி வேண்டாம் என்று கூறினால் அம்மாநிலப் பள்ளிகளில் கட்டாய இந்தி தேவையில்லை” என்று 7–8–1959 அன்று பாரதநாட்டு நாடாளுமன்றத்தில் அமரர் பண்டித நேரு அவர்கள் விளக்கம் கூறினார்.

மேலும் அதுபோது அவர்,

'நான் இரண்டு காரியங்களை யோசனைக்காகக் கூற விரும்புகிறேன். முதலாவதாக இந்தி திணிப்பு இருக்கக் கூடாது. இரண்டாவதாக, முடிவில்லாத கால அளவுக்கு, எவ்வளவு கால அளவு என்று எனக்குத் தெரியாது. அரசு