பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மொழி

291


யாகிய இந்தியிலேயே கல்வி கற்றுக் கொடுக்கப்படுகிறது. அதனால் இந்தி மாணவர்களின் எதிர்காலம் எவ்வகையிலும் பாதிக்கப்படப் போவதில்லை; ஒளிமிக்கதாகவே இருக்கும்.

கடந்த 25 ஆண்டுகளாக நுண்ணியற் கல்வியைக்கூடத் தாய்மொழி மூலமாகவே கற்பதால் அவர்கள் திறமையும் வளர்ந்து கொண்டிருக்கிறது; இந்தியும் வளர்கிறது. போதும் போதாததற்கு நடுவணரசு வேறு இந்தி மொழியை நவீன மொழியாக்கத் திட்டமிட்டு வளர்த்து வருகிறது. நடுவணரசின் பணித்தேர்வுகள் இந்தி, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் நடைபெறுகின்றன.

இந்தியைத் தாய்மொழியாகப் பெற்ற மாணவர்கள் எளிதில் இந்தியில் அந்தத் தேர்வுகளை எழுதி அதிக வாய்ப்புகளைப் பெறுகின்றனர். இந்தி பேசாத மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களோ அவரவர் தாய்மொழியில் தேர்வு எழுத முடிவதில்லை.

காரணம் இரண்டு; ஆங்கிலத்தின் மூலம் பயின்றதால் தமிழில் எழுதும் பொருள் தெளிவு அவர்களுக்கில்லை. ஆங்கிலத்தில் எழுத முட்டுப்பாடு, தாய்மொழியில் எழுதுவது சலுகையே தவிர, உரிமை இல்லை. ஆதலால் தமிழில் எழுதுவது இழிவு என்ற உணர்வும் காரணம்; ஆதலால், அவர்கள் ஆங்கிலத்திலேயே எழுத வேண்டியவர்களாகிறார்கள். அதனால் அவர்கள் தாய்மொழி மூலம் நுண்ணியற் கலைகளைப் பயிலுதலும் தடைப்படுகிறது. அவர்களின் தாய் மொழி வளர்ச்சியும் தடைப்படுகிறது; அதனால் தாய் மொழியே பயிற்றுமொழி என்ற திட்டம் நடைமுறையில் வெற்றி தரவில்லை. நீதிமன்றங்களின் மொழிகளோ இந்தியும், ஆங்கிலமும்தான்.

இந்தி பேசும் மாநிலங்களில் இந்தியே சட்டத்துறைப் பயிற்று மொழி. இந்தி பேசாத மாநிலங்களில் ஆங்கிலம், சட்டத்துறைப் பயிற்று மொழி. இதனால் இந்தியைத் தாய்