பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மொழி

295


களையும் பாராட்டக் கடமைப்பட்டிருக்கின்றோம். இது இந்தி எதிர்ப்பில் ஒரு திருப்பு மையம், மேற்கு வங்கமும் சேர்ந்து கொண்டிருக்கிறது.

ஆதலால், இந்தத் தடவை இந்தி எதிர்ப்புணர்ச்சியை ஆங்கிலத்தை நீட்டிப்பதற்கு மட்டுமே பயன்படுத்தாமல் நாட்டு மொழிகளை நடுவணரசின் ஆட்சி மொழிகளாக ஏற்றுக் கொள்ளும்படி வற்புறுத்துவது பயன் தரும். அதுவே இந்தியின் ஆதிக்கத்தைத் தவிர்க்கும் முயற்சி; பாராதநாட்டு மக்கள் அனைவரும் சமநிலையில் வளர வாய்ப்பளிக்கும் முயற்சி, இந்தியாவை ஒருமைப்பாட்டுணர்வுடன் வலிமை பெற்ற ஒரு நாடாகக் காக்கும் பணி.

பெரியார் நூற்றாண்டில் இந்தி எதிர்ப்புணர்ச்சி கொழுந்துவிட்டு எரியத் தொடங்குகிறது. இந்த வேள்வியை இன்பம் விளையாது இடும்பைக்கு அஞ்சாது எல்லா வற்றையும் மொழிநலம் காணும் பணியில் அர்ப்பணிப்புணர்வுடன் ஈடுபடவேண்டும். இப்பொழுது எழுந்துள்ள இந்தி எதிர்ப்புணர்ச்சி முழுமையான - நிலையான வெற்றியைப் பெறவேண்டும். ஆதலால் அறிஞர் அண்ணாவின் கொள்கை வெற்றிப் பெற வேண்டும்.

"இந்தி மட்டும் பாரதத்தின் ஆட்சி மொழியன்று. பாரதத்தின் அனைத்து நாட்டு மொழிகளும் நடுவணரசின் ஆட்சி மொழிகள், அவ்வழி நம் தாய்மொழியாம் தமிழும் ஆட்சி மொழியாக வேண்டும். ஆங்கிலமும் நாட்டுமொழிப் பட்டியலில் சேர வேண்டும். ஆங்கிலம் நாட்டின் தொடர் மொழியாகப் பயன்படுத்தப் பெறுதல் வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்து நாம் போராட வேண்டும்.

நமது கோரிக்கை அரசியற் சட்டத்தில் இடம் பெறும் வரை தமிழ் நாட்டு மக்கள் அனைவரும் எந்த வகையிலும் வேறுபடாது ஒன்றுபட்டு நின்று வற்புறுத்த வேண்டும் இந்தப் பணியில் யார் பெரியவர்? யார் சிறியவர்? என்ற வேறுபாட்