பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

302

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


யினும் அந்நாட்டு மக்கள் முயன்றால் அந்நாட்டை வளமாக்க முடியும் என்பதற்கு இசுரேல் ஒரு சான்று.

நாட்டை வளப்படுத்த உழைப்பு தேவை. உழைப்பு என்பது உயிர்ப்புள்ள – படைக்கும் தன்மையுடைய சிறந்த ஆற்றல். இந்த உழைப்பை வேள்வியாக நினைத்துச் செய்தல் – இயற்றுதல் வேண்டும். மாமுனிவர் மார்ச்சு, "உழைப்பது என்பது உயிர்க்குணமாக – மாறாத இயல்பாக – இயற்கையிலமைந்த ஒழுகலாறாக என்றைக்கு இடம் பெறுகின்றதோ அன்றுதான் பொதுவுடைமைச் சமுதாயம் கால்கொள்ளும்" என்று கூறியுள்ளார். அதனால்தான் சோவியத் ஒன்றியத்தின் அரசியல் சட்டத்தில் உழைக்காதவனுக்கு உண்ண உரிமை இல்லை என்ற விதி இடம் பெற்றிருக்கிறது.

இன்று நமது சமுதுாயத்தில் உழைக்காமல் உண்பதற்கு வசதி படைத்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு உழைக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால் அவர்கள் உண்பனவும் நுகர்வனவும் உழைப்பால் படைக்கப்பட்டவையே என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். ஆம்! சிலர் உழைக்காமல் உண்கிறார்கள். மற்றவர்களின் உழைப்பில் உண்கிறார்கள்! இதை மத உலகம், "புண்ணியத்தின் பயன்” என்று பாராட்டுகிறது. அரசியல் சட்டங்கள் உரிமை என்ற பெயரால் பாதுகாக்கின்றன. உழைத்து உண்பது கேவலம் என்ற உணர்ச்சி மறைந்து உழைக்காமல் உண்பது கேவலம் என்ற கருத்து, சமுதாயத்தில் கால் கொள்ள வேண்டும்.

உழைப்பையும்கூட மேம்போக்காக, மினுக்காக, யாருக்காகவோ செய்வதுபோலக் கடன் கழிக்கும் மன நிலையில் செய்வது உழைப்பாகாது. இத்தகையோர் உழைப்பில் ஆற்றலும் உயிர்த்துடிப்பும் படைப்பாற்றலும் இரா. தமது ஆற்றலுக்கு ஏற்றவாறு உழைக்காது – உழைப்பாற்றலைப் பயன்படுத்தாது வாழ்தல் ஒரு சமூகத் தீமை. அது வெறுக்கத்தக்கது. அழுகி ஒழுகும் தொழுநோயை