பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

307


ஈடுபட்டுள்ளோர் உற்பத்திப் பணியில் ஈடபட முடியாத நிலை. அடுத்து, தனியார்கள் குறுக்கு வழியில் இலாபம் ஈட்டும் நோக்கத்துடன் கலப்படம் செய்கின்றனர். கலப்படத்தால் வளரும் தீமை சொல்லுந்தரத்தன்று. எனவே கலப்படத்தையும் தவிர்க்கலாம். மூன்றாவதாக விலைவாசியைக் கட்டுப்படுத்தலாம். பொருளைப் பதுக்கி செயற்கை முறையில் பொருள் தட்டுப்பாட்டை உண்டாக்கி விலையை ஏற்றுவது என்பது தனியார் துறைக்குள்ள கைவந்த கலை. கூட்டுறவுத் துறையில் பொதுத் துறையில் விலையைக் கட்டுப்படுத்த முடியும். நான்காவதாக, கிடைக்கும் இலாபம் உற்பத்தியாளர்களுக்குக் கிடைக்கும். ஆனால், இன்றுள்ள நிலையில் கூட்டுறவுத் துறையில் விலை கூடுதலாக இருக்கிறது. ஏன்? கூட்டுறவுத் துறையில் பொறுப்பின்மையும் நீக்குப் போக்காக நடக்கத் தெரியாத நிர்வாக நடைமுறைகளும் அளவுக்கு மிஞ்சிய நிர்வாகச் செலவுகளுமே காரணம். இந்த நடைமுறைகள் மாறியாக வேண்டும். அப்பொழுது தான் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும்.

–'மக்கள் சிந்தனை' 15–2–81


4. சமநிலைச் சமுதாயம்

இந்தியா இயற்கையமைப்பில் மட்டும் மேடு பள்ளங்களையுடைய நாடு அல்ல. இந்திய சமுதாயத்திலும் எண்ணத் தொலையாத மேடுபள்ளங்கள்; ஆனால் நாட்டில் உள்ள மேடுபள்ளங்கள் இயற்கையிலமைந்தவை. இந்த வேறுபாடுகள் கவர்ச்சியைத் தருவன; வாழ்க்கைக்கு ஆக்கமளிப்பன; இதமளிப்பன. இந்திய சமுதாயத்தில் உள்ள மேடு பள்ளங்கள் இயற்கையாயமைந்தவையல்ல; முற்றிலும் செயற்கையாயமைந்தவை. அருவெறுப்பைத் தரக்கூடியவை. அழிவைத் தரும் இயல்பின. இந்த மேடு பள்ளங்களும் பல வகையின.

இந்திய சமுதாயம் சாதிமுறைகளாலாய அமைப்புடையது. தீண்டாமை என்ற பெரிய படுகுழியும் உடையது.