பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

308

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பார்வைக்குச் சமுதாயத்தைத் தரவாரியாக அடுக்கி வைத்திருப்பது போலத் தோன்றும். ஆனால் இஃது உண்மையான தோற்றமன்று. மாயாவாதக் கொள்கையினரின் படைப்பாகிய சாதிமுறைகளும் ஒரு மாயை போலத் தோன்றும். ஆனால் உள்ளீடாக – ஆழமான வேற்றுமைகள் பகையுணர்ச்சிகள் வளர வழி வகுக்கப் பெற்று, தொடர்ச்சியாக இந்திய சமுதாயத்தை உருக்குலையச் செய்துவிட்டது. அடித்தட்டு மக்கள் எழுந்திருக்க முடியாமலே அமுக்கப் பெற்று விட்டனர். அதுமட்டுமா? எழுந்திருக்க வேண்டும் என்று எண்ணுவதே வேதத்திற்கு முரணானது என்ற சாத்திர அமைப்புக்களைக் காட்டி அவர்களுடைய சிந்தனைப் புலன்களை மரத்துப் போகும்படி செய்தாயிற்று. இப்படி ஒடுக்கப்பெற்ற பலகோடி மக்கள் சிந்தனையிழந்து, அறிவு இழந்து, உருவத்தில் மனிதராய் – வாழ்க்கை அமைப்பில் விலங்குகளாய் வாழ்ந்தனர். இந்தச் சாதி முறைகள் ஒழுக்கத்தின் பாற்பட்டவையல்ல; பிறப்பின் பாற்பட்டவை. இந்தத் தீண்டாமையைத் தமிழ்த் தலைவர்களாகிய அப்பரடிகள். இராமானுசர் முதலான சமயச் சான்றோர்கள் எதிர்த்துப் போராடியும் வெற்றி பெற்றார்களில்லை. ஆங்கிலேயர்களுடன் வந்த புகை வண்டியும் பேருந்துகளும் இந்த இறுக்கமான சாதி முறைகளை இடித்துத் தள்ளின. புகை வண்டியும் பேருந்தும் வசதிக்குரிய அமைப்புகளாயிற்றே! எளிதில் அதனை இழக்க மனம் வருமா? ஆதலால் ஒரே வண்டியில் பயணம் செய்தார்கள். ஒரளவு சாதி முறைகள் நெகிழ்ந்து கொடுத்தன. ஆயினும் வீட்டில் – வீதியில், கல்விக்கூடங்களில், திருக்கோயில்களில் இச்சாதி முறைகள் ஆட்சி செலுத்தியே வந்தன. புகைவண்டியில் பயணம் செய்தவர்கள் சிலர் வீட்டிற்குப் போனதும் குளித்து விட்டே வீட்டிற்குள் போவது வழக்கமாக இருந்தது. உணவகங்களில் பார்ப்பனர் சாப்பிடத் தனி இடமும் மற்றவர்களுக்குத் தனி இடமும் இருந்தன. இன்றும் கூட கிராமப் புறங்களில் இந்தத் தீமை அகன்ற பாடில்லை.