பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

311



5. இட ஒதுக்கீட்டுக் கொள்கை ஒரு சிந்தனை


ஒரு சமுதாய அமைப்பில் வளர்ந்தவர் வளராதவர் என்ற நிலை இருக்கும்வரையில் இட ஒதுக்கீட்டுக் கொள்கை இருக்க அனுமதிப்பதுதான் நியாயம். ஆனால் முற்படுத்தப்பட்டோர் என்று தம்மைக் கூறிக் கொள்ளும் உயர் சாதியினர் இட ஒதுக்கீட்டுக் கொள்கையின் மூலம் தாம் பிற்படுத்தப்பட்டு விட்டதாக கூறிப் போராட்டங்களைத் தொடங்கியுள்ளனர். இந்தப் போராட்டத்தின் அடிப்படை நியாயமானது என்று கருதமுடியாது. தாழ்த்தப்பட்டவர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று கூறப்பெறும் சமுதாயங்கள் இன்னமும் முற்படுத்தப்பட்டோருடன் ஈடுகொடுத்து நிற்கக் கூடிய தகுதியைப் பெறவில்லை. பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோரிலும்கூட ஓரளவு வசதி வாய்ப்புடையவர்களும் மற்றவர்களைப் பார்த்து முன்னேற வேண்டும் என்ற உணர்வுடையவர்களும் மட்டுமே ஓரளவு முன்னுக்கு வந்துள்ளனர். அவர்களும்கூட ஓரளவுதான்! மற்றபடி தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர்களில் இன்னமும் எழுபத்தைந்து விழுக்காட்டினர் பின்தங்கிய நிலையில்தான் இருக்கின்றனர். இவர்களுடைய முன்னேற்றத்திற்குரிய களம் கண்டு, வாயில் அமைத்ததே 35 ஆண்டுகளுக்கு முன்பு தானே? முன்னேறியோர் பயிற்சி பள்ளி ஆண்டுகள் ஆயிற்றே! எப்படி 35 ஆண்டுகளில் ஈடு கொடுக்க முடியும்?

கடமை உணர்வு, நாகரிகம், பண்பாடு, இசைந்து வாழ்தல் ஆகிய வளர்ச்சிக்குரிய பண்புகளைக்கூட இன்னமும் தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர் பெறவில்லை. இந்தப் பண்புகளும் பொறுப்புணர்வும் கல்வி ஆர்வம் தோன்றிய பிறகுதான் தோன்றும். ஒரு பார்ப்பன இளைஞன் ஒரு வீட்டில் வேலை செய்துகொண்டே படித்துப்