பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

312

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பட்டதாரியாக வந்துவிடுவான். மாயூரத்தில் பல பார்ப்பன இளைஞர்கள் நான்கைந்து வீடுகளுக்குத் தண்ணீர் எடுத்துக் கொடுத்தும். வேறு ஏவல்களைச் செய்தும் வேளைக்கு ஒரு வீடாகச் சாப்பிட்டும் கல்வி பயின்று பின் நல்ல பொறுப்புகளுக்கு வந்திருக்கிறார்கள். பிற்பட்ட சமூகத்தினைச் சார்ந்த இளைஞர்களிடம் இந்தப் பண்பினை எளிதிற் பார்க்க இயலாது. நாமே சொந்த அனுபவத்தில் கண்டறிந்த ஒன்று. நமது பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் இரண்டு பின் தங்கிய மாணவர்களை முழுப்பொறுப்பையும் நாமே ஏற்றுக் கொண்டு, படிக்க அனுப்பி வைத்தோம். ஆனால் அவர்கள் படித்துப் பட்டம் பெறாமல் இடையில் வந்துவிட்டார்கள். வந்ததும் நமக்குத் தெரியாது. பின் ஒரு சந்தர்ப்பத்தில் அவர் களைக் கேட்டபோது ‘வசதியாக இல்லை' என்றார்கள், என்ன வசதி தேவை என்று கேட்டுப் பெற்றிருக்கலாம். அந்த அளவு பொறுப்பு இல்லை. இன்று அவர்கள் நிலை என்ன? எளிதில் வேலை கிடைக்கக் கூடிய பட்டங்களும் பெறவில்லை. தொழில் செய்து வாழும் பொறுப்புணர்வும் இல்லை. இதுபோல நூற்றுக்கணக்கான உதாரணங்கள் கூறலாம். ஏன்? கல்லூரியில் போராட்டங்களையெல்லாம் முன்னின்று நடத்துபவர்கள் இவர்கள்தாமே. இதற்கெல்லாம் காரணம் நன்முயற்சிக்குரிய பழக்கங்கள் தோன்றி வழக்கங்களாக மாற உரிய காலம் அமையாததுதான்.

ஆதலால் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை இந்தச் சூழ்நிலையில் கைவிட இயலாது - கூடாது. அது மட்டுமா? முற்படுத்தப்பட்டோர் வளர்ந்த சமுதாயத்தினர் புத்திக் கூர்மையுடையவர்கள் இவர்கள் ஒன்றும் பின் தங்கிவிடவில்லை. அந்தச் சமூகத்திற்குள்ளும் யாராலும் ஏற்கப் பெறாது உயர்நிலைச் சுற்றுவட்டார உறவுகள் இல்லாது சில குடும்பங்கள் பின்தங்கியிருப்பது உண்மை. ஆனால் இந்த உண்மை சமுதாயம் தழுவியது அல்ல. சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன் பல கல்லூரிகளில் உயர் சாதியினருக்கு