பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

33

இடம் கிடைக்காத சூழ்நிலையை வெற்றி காணச் சில நாள்களிலேயே முயன்று விவேகானந்தா கல்லூரி காணப் பெற்றது என்று கூறுவர். மேலும் உயர் சாதியினர் நடத்தும் கல்லூரிகள் பல உள்ளன. இன்றும் தமிழகத்தின் தொழில் மன்னர்கள் உயர் சாதியினர்தாம்; அதிலும் குறிப்பாகப் பார்ப்பனர்கள்தாம்; இட ஒதுக்கீட்டுக் கொள்கையை இந்தத் தொழில் நிறுவனங்கள் சரியான முறையில் நடைமுறைப்படுத்துகின்றன. அதாவது இந்தத் தொழில் நிறுவனங்களுக்குரிய பணிகளில் உயர் சாதியினருக்கே பணிகள் ஒதுக்கப்படுகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக உயர் சாதியினருக்கும் குறுகிய இடப்பற்று கிடையாது; இந்தி எதிர்ப்புணர்ச்சி கிடையாது. ஆதலால் நடுவண் அரசின் பணிவாய்ப்புகளை உயர் சாதியினரே அடைந்து அனுபவிக்கின்றனர். ஆதலால் இட ஒதுக்கீடுக் கொள்கையின் மூலம் உயர் சாதியினர் மிகவும் பின் தள்ளப்பட்டு விட்டனர் என்று கருதுவதற்கில்லை. ஆயினும் பழைய சமூக அமைப்பில் பிறப்பை அடிப்படையாகக் கொண்டது போலவே இட ஒதுக்கீட்டுக் கொள்கையைப் பிறப்பின் அடிப்படையில் அணுகாமல், இருக்கும் நிலைமைகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு ஒதுக்கீட்டுக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது பற்றி ஆலாசிக்க வேண்டிய காலக் கட்டம் உருவாகியுள்ளது. பிறப்பு வழியிலான எந்த வேறுபாட்டையும் தொடர்ந்து ஆதரிக்காமல் இருப்பது நல்லது. பிறப்பு, வளரும் சூழல், வசதி இந்த அடிப்படைகளை அளவுகோல்களாகக் கொண்டால் என்ன என்று மறு ஆய்வு செய்ய ஆட்சியாளர்கள் முன்வரவேண்டும். இது குறித்துத் திருக்குறள் பேரவையினர் ஒரு பரிந்துரையை மக்கள் மன்றத்தின் முன் வைத்துள்ளனர். அப்பரிந்துரையை ஆராய்ந்து நடைமுறைப் படுத்துதல் இந்தியாவின் சாதிப் பகையை நீக்க உதவும்.

– 'மக்கள் சிந்தனை' 1–6–81