பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

315


– இந்திய சமயங்களில் பெளத்தத்தைத் தவிர எந்த மதமும் உலகச் சமயம் ஆகாது – ஏன்? இந்தச் சாதி முறைகளால்தான் என்பதை மறந்து விடுவதற்கில்லை. கோயிலில் சாதி, மடங்களில் சாதி, ஜகத்குருமாரர்களும் சாதி, குலம், பிறப்புச் சுழிகளில் தலைப்பட்டுத் தடுமாறியவர்கள் தாம்! ஏன்? நமது குடியரசுகூட அப்படித்தான்! ஒரு மதத்திலிருந்து இந்து மதத்திற்கு வரலாம். ஆனால், வருகிறவர்கள் குறிப்பிட்ட சமூகத்தில் அவர்களுடைய ஒப்புதலுடன் சேரவேண்டும் ஏன் இந்த இரும்புச் சட்டம்? சாதி முறைகள் நெகிழ்ந்து ஒன்றாகிவிடக் கூடாது என்பதுதானே கருத்து?

ஆதலால் நமது மதத்தில் மற்றவர்களைச் சேர்த்தால் எந்தச் சாதியில் சேர்ப்பது என்ற பிரச்சினை வந்து விடுகிறது. ஆதலால் நமது சமயத்தைச் சார்ந்து ஒழுகுகிறவர்கள் இன்று உலக நாடுகளின் இனத்தைச் சார்ந்தவர்களிடையில் இல்லை. இன்று உண்மையில் "ஜகத்குரு"க்களாக விளங்குகிறவர் போப் தான்! அடுத்து ஆகாகான் தான்! ஆதலால் இந்தக் காலக் கட்டத்திலாவது சாதி முறைகளை அறவே அகற்றும் சிந்தனை நமது சமயத் தலைவர்களுக்கு வந்தாக வேண்டும். அவர்களுக்கு இது எளிதில் வருமா? சமயத் தலைவர்களுக்கு வந்தாலும் சரி வராமல் போனாலும் சரி பெரியாரைப் பின்பற்றுகிறோம், என்று கூறிக் கொள்ளும் தமிழ்நாடு அரசுக்கு இச்சிந்தனை வந்தாக வேண்டும். இந்தச் சிந்தனை எளிதில் வராது, ஏன்? உயர் சாதியினர் அரசுக்குக் கேடு செய்வார்கள். ஆனாலும் வெற்றி சாதியற்ற சமுதாயத்திற்குத்தான் என்பதை உறுதியாகக் கூறலாம். ஆதலால் திருக்குறள் பேரவையின், சாதிச் சிக்கல்கள் தீர்வுக்குச் செய்த பரிந்துரைகளைத் தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

'திருக்குறள் பேரவை'யின் பரிந்துரை என்ன? இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்குப் பிறப்பினால் அமையும் சாதிகுல வேற்றுமைகளை அளவுகோலாகக் கொள்ளக் கூடாது. அவர்தம் வாழ்க்கை நிலைகளையே அளவு கோலாகக்