பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

317


உரிமையுடையன. பிறப்பின் காரணமாகச் சிறப்பும் இல்லை; இழிவும் இல்லை. உயிர்கள் முயன்று பெறும் பெருமை உண்டு” என்றும் திருக்குறள் கூறுகிறது.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பது திருக்குறள் ஆதலால் இந்த மாநாடு மக்கள் மன்றத்தில் நிலவும் இனவேற்றுமை, நிறவேற்றுமை, சமய வேற்றுமை முதலியவைகளை முற்றாக வெறுக்கிறது. வேறுபாடுகள் இல்லாத ஒருமைப்பாடுடைய சமுதாயத்தை அமைப்பதே திருக்குறள் பேரவையின் குறிக்கோள். சாதி வேற்றுமையைச் சமுதாயத்தில் வளர்க்க நினைக்கும் ஒரு சில பிற்போக்கு மத, கலாச்சார சக்திகளைத் தக்கவாறு சந்தித்து அவைகளை மக்கள் மன்றத்திலிருந்து விலக்கித் தனிமைப்படுத்துவது என்று பேரவை தீர்மானிக்கிறது.

இந்த மாநாடு, சாதி மனப்பான்மையிலிருந்து விடுதலை பெற்று ஒரு குலம் காண முன்வரும்படி மனித குலத்தை அழைக்கிறது. அரசியற் கட்சிகள், நாட்டை நலிவுறச் செய்யும். சாதி மன்னபான்மைகளைக் கட்சி வளர்ச்சிக்கும், தேர்தல் வெற்றிக்கும் பயன் படுத்தாதிருக்கும்படி இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. அரசுகள் சாதி, இனவேற்றுமைகள் வளராமல் கண்காணிக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும். மனித குலத்தில் வேற்றுமைகளை வளர்க்கும் இயக்கங்களை அரசுகள் மறைமுகமாகவோ, நேரிடையாகவோ ஊக்குவிக்கக் கூடாது. சாதி வேற்றுமைகளைத் தூண்டும் இயக்கங்களின் மீது நடவடிக்கை எடுத்து ஒடுக்க வேண்டும். சாதிகளற்ற சமுதாயத்தை நடைமுறைப்படுத்தும் பொழுது சமுதாயத்தில் முன்னைய வரலாற்று நிகழ்வுகளின் காரணமாகத் தாழ்த்தப்பட்டிருக்கின்ற - பிற்படுத்தப்பட்டிருக்கின்ற சமுதாயத்தினரின் முன்னேற்றத்திற்குத் தடை ஏற்பட்டுவிடக் கூடாது. சமுதாய நடைமுறைகளால் நலிந்து பின்னடைந்திருப்பவர்கள் வலிமையுடையவர்களுடன் சமநிலையில் போட்டி போடும் தகுதியினை இழந்திருப்பர்.