பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

320

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மக்கள் மன்றத்தையும் அரசுகளையும் கேட்டுக் கொள்வதுடன் சாதிப் பெயரால் அமையும் நிறுவனங்களுக்கு அரசுகள் உரிமம் வழங்கக் கூடாது என்றும் கேட்டுக் கொள்கிறது.

மனித குலத்தை வருத்துவது சாதி வேற்றுமை மட்டுமன்று. செய்யும் தொழிலால் ஏற்படும் வேற்றுமைகளாலும் சிலர் உயர்வாகவும் சிலர் தாழ்வாகவும், நடத்தப்படும் கொள்கை திருக்குறளுக்கு உடன்பாடுடையதன்று. செய்யும் தொழிலின் காரணமாக ஒருவர் சிறப்பைப் பெறுவதோ, இழிவைப் பெறுவதோ கூடாது என்பது திருவள்ளுவர் கொள்கை அவரவர் தகுதிக்கேற்பத் தொழில் அமைகிறது. அதனால் எந்தத் தனிச் சிறப்பையும் பெற்றுச் சமுதாயத்தி லிருந்து விலகி ஒதங்கி உயர்தல் - உயர்த்திக் கொள்ளுதல் கூடாது என்று திருக்குறள் கூறுகிறது. "சிறப்பொவ்வா செய் தொழில் வேற்றுமையான்” என்பது திருக்குறள். ஆக, பிறப்பின் அடிப்படையிலும் சரி, தொழிலின் அடிப்படையிலும் சரி ஒருவர் உயர்ந்தவர். ஒருவர் தாழ்ந்தவர் என்பது கூடாது என்ற சமுதாயக் கொள்கையை இப்பேரவை மக்கள் மன்றத்தில் வைத்து வளர்த்து வழி நடத்துவது எனவும், அரசியல் முதல் ஆண்டவன் சந்நிதிவரை எங்கும் தீண்டாமையில்லாத ஒரு குல உணர்வை வளர்க்கப் பாடுபட வேண்டும் எனவும் இம்மாநாடு உறுதி கொள்கிறது.

வரலாற்று நிகழ்வுகளின் காரணமாகத் தாழ்த்தப்பட்டவர்களாகவும் ஒதுக்கப்பட்டவர்களாகவும் ஆக்கப்பட்டவர்கள் உயர் சமுதாயத்தினருடன் எல்லாத் துறைகளிலும் ஒத்து உயர்ந்து விளங்குகின்ற வகையில் அரசு செய்யும் உதவிகளைத் தொடர்ந்து செய்து அவர்களை வளர்த்து, எல்லாரும் சமநிலை என்ற கொள்கையை உறுதிப்படுத்தும்படி அரசுகளை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. சாதிவேறுபாடுகளை முற்றாக நீக்கி "ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" என்ற சமுதாய அமைப்பைக் காணத் தொடர்ந்து ஈடுபடுவதில்