பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

325



இந்தச் சாதிகள் மாநிலந்தோறும் எண்ணிக்கையில் மாறுபடுகின்றன. பலருக்கும் தெரிந்தது நால் வருணம்; நாற்சாதி! அதாவது பிராமணர் (புரோகிதர்), க்ஷத்திரியர் (போர் செய்வோர்), வைசியர் (வணிகர்), சூத்திரர் வேலைக்காரர்) என்பன. இந்த நான்கனுள்ளும் அடங்காத – அப்பாற்பட்ட ஐந்தாவது சாதி – தாழ்த்தப்பட்டவர்கள்; தமிழ் வழக்கு புலையர் என்பதாகும்.

முதல் மூன்று பிரிவினர்களிடையிலும் கூட இடைவெளி உண்டு. ஆயினும் ஒரு நல்ல உடன்பாடு உண்டு. அறிவு, வலிமை; பணம் – இவற்றிற்கிடையே நெருக்கமான உறவு இருப்பது வியப்பல்ல. நான்காமவர் அவர்களுள் கடையர்; சொத்துரிமைக்குரியரல்லர். ஆயினும் தீண்டாமை இல்லை. ஏன் வீட்டு வேலை நடக்க வேண்டும்! இந்தியாவில் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றவர்களுடன் இணைந்து வாழ்தலுக்கேற்றவாறு வளர்வதில்லை. மற்றவர்களும் மனித மதிப்பீட்டுணர்வில் தாழ்த்தப்பட்டவர்களுடன் உரிமையும் உறவும் கொண்டு வாழ்வதில்லை. தாழ்த்தப்பட்டவர்களுக்கு முற்காலத்தில் திருக்கோயில் வழிபாட்டுரிமை இல்லை. திருக்கோயில் வழிபாட்டுரிமையைப் பெறும் வகையில் நிலப்பிரபுத்துவ சமுதாயத்தையும் அதனால் ஏற்படுத்தப்பட்ட தீமைகளையும் அந்த நிலப்பிரபுத்துவத்திற்குச் சேவகம் செய்து பிழைத்த மதத் தலைவர்களையும் சாத்திரங்களையும் எதிர்த்துப் போராடிய முதல் தலைவர் திருநாளைப் போவார். அவருடைய போராட்டங்களில் கடவுள்கூட அவருக்குத் துணையாக இல்லை என்று புராணங்களே கூறுகின்றன. திருப்புன்கூர்த் திருத்தலத்தில் எழுந்தருளிய இறைவன், நந்தனாரை உள்ளே வரும்படி அழைக்கவுமில்லை. நந்தனாரைக் காண வெளியே வரவுமில்லை. நந்தி வழிவிடவில்லை. கடவுளையும் மீறிய சாதிக் கொடுமை புரோகித ஆதிக்கம் எல்லாம் தூரப் பார்வையாக நிகழ்கிறது. சாதிக் கொடுமைக்கு அடுத்துத் தோன்றி வளர்ந்தவை குலங்களும் கோத்திரங்களும், இந்தக்

கு.xiii.22.