பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

329



ருடனும் கூடிக்கலந்து பழகும் வாய்ப்புள்ள பொதுப் பள்ளிக்கூடங்களிலேயே கல்வி கற்க வேண்டும். கல்வியிலும் பொருளாதாரத்திலும் பின் தங்கியவர்களுக்கென்று பொதுவான விதிகள் அமைத்து, அனைத்து வகுப்பினரும் கலந்து பழகவும் படிக்கவும் வாய்ப்பளிக்க வேண்டும். தாழ்த்தப்பட்டவர்களும் பின்தங்கியவர்களும் வளர்ந்தவர்களுடன் சமமாக நிற்கும் நிலை பெறும் வரையில் ஒதுக்கீடுகள் தவிர்க்க முடியாதன. ஆயினும் "நன்றாற்றலுள்ளும் தவறுண்டு” என்ற தமிழ் மறையை நினைவு கொள்க.

அரசுப் பணிகளுக்குரிய இட ஒதுக்கீடுகளுக்கு மிகமிகப் பின் தங்கியவர் என்ற அடிப்படையை அளவுகோலாக வைத்துக்கொள்ள வேண்டும். சாதிப்பெயர்கள் அறவே அகற்றப்படுதல் வேண்டும். இவ்விதம் வழங்கும் பொழுது குடும்ப அடிப்படையில் உதவி செய்ய வேண்டும். தாழ்ந்த – பின்தங்கிய நிலைக்குரிய அடையாள அட்டை வழங்குதல் வேண்டும். அந்த அடையாள அட்டை ஐந்து அல்லது பத்து ஆண்டுகள் வரையில் பயன்படும். அதாவது அவர்கள் முன்னேறுகிறவரையில் பயன்படும். இந்த உதவிகளை, சாதிகள் அடிப்படையில் அல்லாமல் பின்தங்கிய நிலையினைக் கணக்கில் எடுத்துக் கொண்டு அந்த அடிப்படையில் வழங்க வேண்டும்.

ஒரு குடும்பம் கல்வி, பொருளாதாரத்தில் வளர்ந்தவுடன் அந்த அட்டையைத் திரும்பக் கொடுத்து விட வேண்டும். அதாவது அந்தக் குடும்பத்துக்கு இட ஒதுக்கீடு இல்லை என்பது பொருள்.