பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிற்பட்ட சமுதாயம் சீரமைவுச் சமுதாயம் மிகவும் பிற்பட்ட சமுதாயம் ஆகியவைகளுக்கும் இந்த விதி பொருந்தும்.

5. தாழ்த்தப்பட்டோர் பிற்பட்டோர் உயர்குடியினர் யாரும் எந்த ஒரு பிரிவினர்க்கும் சாதிச் சங்கங்கள் அமைத்துக் கொள்ள உரிமை இருக்கக்கூடாது. சாதிச் சங்கங்கள் அமைத்து நடத்துவது சாதிகளைப் பற்றிப் பேசுவது குற்றவியலைச் சார்ந்த குற்றங்களாகக் கருதப்படுதல் வேண்டும்.

6. காதல் திருமணங்கள் நிகழ்வதற்குரிய சூழல்கள் மிகுதியும் தேவை. காதல் திருமணங்களைத் தடுப்பது, கொடுமைப்படுத்துவது ஆகியன, கடுமையான குற்றவியல் குற்றங்களாக்கப்படுதல் வேண்டும்.

7. பாடப் புத்தகங்களில் சாதிப் பெயர்கள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

8. மத நிறுவனங்களில் சாதி முறைகள் அகற்றப்பட வேண்டும். திருக்கோயில்களில் பக்தர்கள் எந்த வேறுபாடுமின்றிப் பூவும் புனலும் சொரிந்து வழிபாடு செய்து கொள்ள உரிமை வேண்டும். மடங்கள் சாதியமைப்பின் படிமங்களாக இல்லாமல் சமய அமைப்புகளாக உருமாற்றம் பெற்றாக வேண்டும். சமய ஆர்வமுள்ள எவரும் திருக்கோயில், திருமடங்களில் எப்பணியிலும் அமரலாம் என்ற நியதி உருவாக வேண்டும்.

9. சாதி, குலம், கோத்திரங்களுக்கு அரண் செய்யும் மதத் தொடர்பான சாத்திரங்களில் புராணங்கள் இதர நூல்கள் தடை செய்யப்படுதல் வேண்டும்.

10. நமது சமுதாயத்தில் தீண்டாமை, சாதி வேற்றுமைகளை அறவே அகற்ற தீவிரமான அறவழிப் போராட்டங்கள் தேவை.

அன்பு கூர்ந்து சிந்தனை செய்யுங்கள்!