பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

332

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கற்கும் இயக்கம் பெருகி வளர்ந்திருக்கிறது. ஆனால், "அறிவு" தான் வளர்ந்தபாடில்லை. கற்ற கல்வியை வாழ்க்கையில் சோதனை செய்தால்தானே அறிவு தோன்றும். இந்த வாய்ப்பு வழங்கப் பெறவில்லை. மக்களிடத்தில் - இளைஞர்களிடத்தில் ஆர்வமும் இல்லை. "பொறிகளின் மீது தனியரசாணை" என்றான் பாரதி. பொறிகள், புலன்கள் ஆற்றலுடையன; படைப்பாற்றலுடையன. இவற்றைப் படைப்பாற்றலாக வளர்த்துப் பயன் கொள்வது ஆளுமை, இன்றையச் சமூகம் களியாட்டத் தன்மையையும் சோம்பலையும், வளர்க்கத்தக்க சூழல்களையே உருவாக்கி வருகின்றது. பொழுது போக்கும் களியாட்ட வாழ்க்கையில் ஒரு பகுதியே - அதுவே வாழ்க்கையாக மாறக்கூடாது "ஒவ்வொருவரும் சமூகத்தால் வாழ்விக்கப்படுகிறோம்" என்ற சமூக உணர்வில் சமூகத்திற்கு நலம் தரும் உழைப்பினைக் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம் என்று எண்ணி, சமூகச் சிந்தனையோடு நட்புறவாய் இணைந்து உழைத்து - ஒத்துழைத்து வாழ்வதே பண்பாடு. இவைகள் வளரும் வாய்ப்புகள் பல உருவாக்கப்படுதல் வேண்டும். இன்றைய இந்திய சமுதாயம் பண மதிப்பீட்டு முறையில் இயங்கும் சமுதாயம். ஆதலால், எங்கும் பணத்தோட்டம், பணத்தின் ஆதிக்கம். அதனால் இளைஞர்கள் கூடத் தங்களுடைய ஆற்றலை வெளிப்படுத்திச் சாதனை செய்ய வேண்டும் என்று முனைவதில்லை. அரசுகள், மக்கள் போக்கில் செல்கின்றன. மக்களை நெறிமுறைப்படுத்தி வளர்க்க அரசுகள் முயலவில்லை; விரும்பவில்லை. இந்த நிலையில் நமது மாபெரும் சமுதாயத்தில் வலிமையும் வளமும் பெற்ற குடும்பம் தோன்றவில்லை; சமூகம் தோன்றவில்லை; நாடு உருவாகவில்லை. இதுவே இன்றைய உண்மை நிலை.

எந்தவிதச் சமூகப் பிரச்சனையும் தோன்றுவதற்கு இந்த நிலைகெட்ட சமுதாயச் சூழலே காரணம். சமுதாயத்தில் சமாதான சகவாழ்வு, சட்டம், ஒழுங்கு, ஆகியவைகளைக் குலைக்கும் தீயசக்திகள் தோன்றி வளர்ந்து வருகின்றன. இந்த