பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

339


என்று அமரர் நேரு கூறியது போல, இன்று ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பள்ளிக்கூடம், ஒரு கூட்டுறவு, ஒரு பஞ்சாயத்து சபை என மூன்றும் அமைந்துவிட்டன. ஆனால் இவை அமைந்ததால் கிராமங்கள் என்ன பயனை அடைந்தன என்று மதிப்பீடு செய்தால் ஒன்றும் இல்லாதது மட்டுமல்ல. பிரதிகூலத்தையும் தந்துள்ளன என்பதே உண்மை. கிராமங்களில் சமூக, பொருளாதார அமைப்பில் வளர்ச்சியில்லாமல் வேறு என்ன இருந்து என்ன பயன்? அது மட்டுமல்ல கிராமத்தில் வாழ்ந்த சிறு விவசாயிகள், மிகச்சிறு விவசாயிகள் நிலங்களை விட்டுவிட்டு அல்லது விற்று விட்டுக் கூலிகளாக மாறி வருகின்றனர். கிராமப்புற நிலங்கள், நகர்ப்புறத்தில் வாழும் முதலாளிகளால் வாங்கப்படுகின்றன. நிலங்கள் வாங்கி விவசாயம் செய்தால் விவசாய வருமானவரி விலக்கு இருக்கிறது; வருமான வரியிலும் சலுகை கிடைக்கிறது. ஆதலால், முதலாளிகள், கிராமப்புற ஏழைகளின் - நடுத்தர விவசாயிகளின் நிலத்தைச் சந்தடியில்லாமல் வாங்கிச் சேர்த்துக் கொண்டு வருகின்றனர். அரசு ஏழைகளுக்காக என்று திட்டிய திட்டங்கள் கூட, ஏழைகளுக்குப் பயன்படாமல் போனது வேதனை தரத்தக்க செய்தி. உணவுப் பொருள்கள் - தானியங்கள் - நாட்டில் நடைபெற்ற பசுமைப் புரட்சியின் மூலம் நிறைய விளைந்திருந்தும் மக்களில் பெரும்பான்மையினருக்கு இன்னமும் போதிய அளவு சத்தான உணவு கிடைக்கவில்லை. உணவுப் பொருளை உற்பத்தி செய்யும் விவசாயிகள், விவசாயக் கூலிகள் - கிராமங்களில் வாழ்வோர் அரசின் நியாய விலைக் கடைகளில் உணவுப் பொருள்களை ஒழுங்கு வரிசையில் நின்று கூடை தூக்கி வாங்குகிறார்கள். இது ஏன்? எதனால்? அரசுகள் சிந்திக்க வேண்டாமா? கிராம மக்கள் சிந்திக்க வேண்டாமா? பரிகாரம் காண வேண்டாமா? உழுது உலகத்துக்கு உணவளிப்பவனுக்கு உண்ணும் சோற்றுக்குப் பஞ்சம்! இது எந்த நியாயத்தைச் சேர்ந்தது?