பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

358

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சமூக ரீதியான அணுகுமுறையாகும்? ஊராட்சி மன்றங்கள் கிராமங்களைச் சீராக நிர்வாகம் செய்ய – வளர்க்கப் போதிய உரிமைகளும் அதிகாரங்களும் பெற வேண்டும். கிராம அளவில் வேலை செய்யும் அனைத்து அரசு நிறுவன அலுவலர்களும் ஊழியர்களும் ஊராட்சி மன்றத்தின் பணிகளுடன் நேரிடையாகப் பங்கேற்று ஒத்துழைப்புத் தர வேண்டும். இவர்கள் ஊராட்சி மன்றத்தின் செயல் முறைகளுக்கும் வெற்றிக்கும் ஒத்துழைப்பதோடன்றி அந்தப் பணிகளுக்கு – மன்றத்திற்குப் பொறுப்பேற்கக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். இவர்கள் ஊராட்சிமன்றக் கூட்டங்களில் தவறாது கலந்து கொள்ள வேண்டும். இரவுநேரக் கல்விக் கூடங்கள், ஆரம்பப் பாடசாலைகள் ஊராட்சி மன்றத்தின் மேற்பார்வைக்கும் கண்காணிப்புக்கும் உட்படுத்தப்பட வேண்டும். தனியார் பள்ளிகளாக இருந்தாலும் இந்த விதி பொருந்த வேண்டும். அந்தப் பள்ளிகளின் ஆட்சிக் குழுவில் ஊராட்சி மன்றத் தலைவர் அலுவல் ரீதியாக உறுப்பினராதல் வேண்டும்.

ஊராட்சி மன்றத்தின் நிதி ஆதாரங்கள் வலுப்படுத்தப் பெறுதல் வேண்டும். கிராமத்தில் தொழில் உரிமம் வழங்கும் உரிமை ஊராட்சி மன்றத்தினிடமே இருத்தல் வேண்டும். இது தொடர்பான முறையீடுகள் விசாரணைகள் ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் ஒப்புவிக்கப் பெற வேண்டும். ஊராட்சிக்குரிய வருவாய்களை நேரிடையாக வசூலிப்பதற்குரிய அதிகாரத்தை, கூட்டுறவு அமைப்புகளுக்கு இருப்பது போல ஊராட்சி மன்றங்களுக்கு வழங்க வேண்டும். ஊராட்சி மன்றங்கள் தமது நிதி வசதியைப் பெருக்கிக் கொள்ளப் பேருந்து நிலையம் கட்டுதல், அங்காடிகள் கட்டுதல், கிராம எல்லைக்குள் வசிக்கவேண்டிய அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் – காவல் துறையினர் ஆகியோருக்கு வீடுகள் கட்டுதல், பழத்தோட்டங்கள், மேய்ச்சல் தரைகள் அமைத்தல் இன்னபிற பணிகளுக்கு