பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

363


இருத்தல் நல்லது. இவ்வாறு இருந்தால் நல்ல வண்ணம் கற்றுத் தரலாம். எல்லாப் பள்ளிகளும் எல்லா வசதிகளும் பெற்று விளங்க வேண்டும். தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள், பணிசெய்யும் ஊர்களிலேயே குடியமர்தல் கட்டாயமாக்கப்படுதல் வேண்டும். நல்லாசிரியர் விருது வழங்குவதில் மாணவர்களின் தேர்ச்சியும் ஒரு அளவுகோலாக எடுத்துக் கொள்ளப் பெறுதல் வேண்டும். கிராமத் தொடக்கப் பள்ளிகள் ஊராட்சி மன்றத்தின் மேலாண்மைக்கு உட்பட்டவையாக அமைய வேண்டும். தரமான தொடக்கக் கல்வியே சமூக வளர்ச்சிக்கும் கிராமப்புற வளர்ச்சிக்கும் அடிப்படை என்பதை மக்களும், அரசும் உணர வேண்டும்.

கலை – பண்பாடு

மானுட வாழ்க்கைக்குப் பொருள் இன்றியமையாதது. ஆனால் பொருளாதார வாழ்க்கையே மானுட வாழ்க்கையாகாது. மானுடம் சிறப்புற அமைந்தால்தான் பொருளாதார வாழ்வு சிறப்பாக அமையும். ஆதலால் மானுடம் தன்னுடைய உயிராற்றலை வளர்த்துக் கொள்ள இலக்கியம், கலை, சமயம் சார்ந்த வாழ்க்கையும் தேவை, மானுடம் சோற்றால் மட்டும் ஆகாது. களிப்பும், மகிழ்வும், சமாதானமும் அமைதியும் தேவை. இத்தேவைகளை நிறைவு செய்ய கிராமத்தில் உள்ள திருக்கோயில் முன்வரவேண்டும். அல்லது சமயத் தொடர்பான கழகம் கண்டு அதன் வாயிலாக இந்தப் பணிகளை நிறைவேற்றலாம். ஆனால் 'சமயம்' என்னும் பொழுது விழிப்பாக இருக்க வேண்டும். அனைத்தும் சமயங்களின் கட்டமைப்பாகவே இந்த நிறுவனம் தோன்றிப் பணி செய்ய வேண்டும். கிராமப்புற இளைஞர்கள் கலை, நாடக உணர்வுகளை, திறனை வளர்த்து கிராம வளர்ச்சிக்குப் பயன்படுத்தலாம். அறநெறிச் சொற்பொழிவுகள் நடத்தலாம். இலக்கிய ஆர்வத்தையும் வளர்க்கவேண்டும். கூட்டுப் பிரார்த்தனைகள், அருள் நெறி