பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அல்ல. காதலும் நட்பும் மனிதன் வகுத்த எல்லைகளைக் கடக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் பசும்பொன் தேவர் திருமகன் மாவட்டத்தில் பூங்குன்ற நாடு என்பது ஒரு பகுதி. இந்தப் பகுதியில் சங்க காலத்தில் தமிழ் வளர்ந்தது. இந்தப் பகுதியில் மகிபாலன்பட்டி என்று இன்று அழைக்கப்பெறும் ஊர், சங்க காலத்தில் பெற்று விளங்கிய பெயர் கண்டறிய வேண்டும். இங்கு ஒரு ஜோதிடர் வாழ்ந்தார். அவருடைய தொழிற் பெயரும் நாட்டுப் பெயருமே தெரிகின்றன. அவருடைய பெயர் கணியன் பூங்குன்றன். கணியன் பூங்குன்றன் காலம் கி.பி. 200க்கு முந்திய காலம், கணியன் பூங்குன்றன் எல்லைகளைக் கடந்து வளர்ந்த மனித குலத்தையே பாடுகின்றான்.

யாதும் ஊரே யவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே! வாழ்தல்
இனிதென மகிழ்ந்தென்றும் இலமே!
முனிவின் இன்னாது என்றலும் இலமே! மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேரியாற்று
நீர்வழிப் படுஉம் புனைபோல் ஆருயிர்
இறைவழிப்படுஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின் மாட்சியில்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

புறம் – 192

என்பது கணியன் பூங்குன்றன் பாட்டு.

ஆம்! எல்லா ஊர்களையும் சொந்த ஊர்களாக எண்ண வேண்டும்; எண்ணி வாழ்தல் வேண்டும். இந்த