பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமுதாயம்

367



இத்தகு உயர்தர மதிப்பும் பயனும் உள்ள மானுடம் இன்று மதிப்பிழந்து துன்பங்களிலும் துயரங்களிலும் சிக்கித் தவிப்பது ஏன்? அறிவறிந்து ஆள்வினைகள் இயற்றி முறைப்படி வாழத் தெரியாமைதான் துன்பங்களுக்கெல்லாம் காரணம். இதற்கு மூலகாரணம் அறியாமையே! ஆதலால் கற்றல், கேட்டல் மூலம் தேவையான கல்வி அறிவைப் பெறுவது, நம் ஒவ்வொருவரின் கடமையுமாகும். மனிதவளம் நொய்ம்மைப்படாமல் பயன்பட உடல்நலம் பேணப்படுதல் வேண்டும். உடல் நலம் மனிதவளத்தின் முதற்பொருளாகும். உடல்நலம் குன்றின் உயிர் நலமும் குறையும்; செயற்பாடும் குறையும். அதனாலன்றோ, "உடம்பை வளர்த்தேன்; உயிர் வளர்த்தேனே!” என்றார் திருமூலர். உடல் நலமுடன் இருத்தற்கு முதல் வழி, உடலை உழைப்புக் கருவியாகக் கருதி முற்றிலும் பயன்படுத்தலாகும். அதாவது உழைத்தல், உழைக்காத உடல் நோய்வாய்ப்படும்; அழியும்.

அடுத்து, இயற்கையோடிசைந்த வாழ்வு வாழ்தல் அவசியம். கதிரொளி உடம்பில்பட உழைத்தல்; தூய காற்றில் தோய்ந்து உழைத்தல் நல்ல காற்றைச் சுவாசித்தல்; தூய தண்ணீர் அருந்துதல்; உடலுக்கு நலம் தரக்கூடிய - உழைக்கும் அளவுக்குத் தேவையான நல்லுணவு உண்ணுதல் ஆகியன உடல்நலம் பேணுதற்குரிய வழிகள்.

உடல்நலம் சீராக அமைய மனநலமும் ஒத்துழைக்க வேண்டும். மனத்தூய்மை உடல்நலத்திற்கு இன்றியமையாது வேண்டப்படும் ஒன்றாகும். மனத் தூய்மை பெருமுயற்சியுடைய வாழ்க்கை, வாழ்வியல் புறத்தே சென்றால், அஃதாவது அழுக்காறு, அவா, வெகுளி வயப்படும் பொறி களும் புலன்களும் அளவுக்கு அதிக வேகமாகக் கூடுதல் வெப்பமடைந்த நிலையில் இயங்குதலால் எளிதில் நோய்ப்படும். ஒன்றைத் தவறாமல் உளம் கொள்க! நன்மை தரும் செயல்களைச் செய்யும் போது உடல் அதிக வெப்பமடைவதில்லை; வேகமாகவும் இயங்குவதில்லை; மூச்சுக் காற்றும்