பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

370

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அதிகம். கடல் கோடிக்கணக்கான நீர்த் துளிகளை உடையது. கோடிக்கணக்கான நீர்த்துளிகளும் ஒருங்கிணைந்து ஒரு பரப்பாக இருப்பதினால் கடல் கடலாகவும் இருக்கின்றது. வான்மழைக்கும் காரணமாகிறது. கடல்படு வளங்களை எழுதிக்காட்டவும் வேண்டுமா? அந்தக் கடலிலிருந்து ஒரு துளி தண்ணீர் கரையில் விழுந்தால் என்ன ஆகிறது? உடனே அத்துளி வற்றிப் போகிறது. அதுபோலத்தான் மானுட வாழ்வும், மானிடர் ஒரு சமூகமாக உறவு கலந்து இணைந்து வாழ்ந்திடின் வளம் கொழிக்கும். இத்தகு சமூக அமைப்பு இருந்த தொடக்க காலத்தில் மானுடம் வளமாக வாழ்ந்தது. காலப்போக்கில் தனி உடைமை உணர்வு மேலோங்கியதன் விளவைாக, கெட்ட போரிடும் கலகத்திற்கு இரையானது; வளம் குறைந்தது; வாழ்வு கெட்டது. நாம் யாராயினும் யாருக்கும் அந்நியரில்லை – நமக்குள் பிரிவில்லை – சண்டை இல்லை என்ற நிலை உருவானால்தான் மனித வளம் ஆக்கத்திற்குப் பயன்படும். ஆதலால் வளரும் பழத்தோட்டம்போல் ஒரு குலமாக ஒருங்கிணைந்து உழைத்து வாழ்வித்து வாழ்வோமாக!

மனித வளத்திற்கு எல்லாம் தலைமை மனிதன்! மனிதனின் ஆன்மா! அதாவது உயிர் இந்த இயற்கையிலமைந்தது. யாராலும் படைக்கப்பட்டதன்று. அழியக் கூடியதுமன்று. இந்த உயிர் சிற்றறிவு சிறு தொழில் உடையதாக அமைந்துள்ளது. இந்த உயிர் தனது அறிவை அகண்டமாக்கிக் கொள்ளவும் ஒப்பரிய சாதனைகள் செய்யவும் கடவுளை நாடுகின்றது. கடவுள் இயற்கையாயமைந்த ஒரு பொருள்; ஆற்றல் மிக்குடைய பொருள், பேரறிவுப் பொருள்; கடவுள், தேவைகளுக்கு அப்பாற்பட்ட விழுமிய ஞானம்! கடவுள் மனிதனின் உயர்க்குயிராயிருந்து உதவுபவன். கடவுளின் வரம்பற்ற அறிவையும் ஆற்றலையும் சிந்தித்து அவ்வழி நமது பொறிகள் புலன்களில் அந்த அறிவையும் ஆற்றலையும் ஏற்று வாழ்வாங்கு வாழ்தலே ஆன்மநலம்; கடவுள் வழிபாடு