பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு

23


உலகில் எந்தப் பகுதியில் வாழ்பவர்களாயினும் அவர்கள் உறவினர்களேயாம். இது, 1800 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய சிந்தனை. "யாதும் ஊரே! யாவரும் கேளிர்!" என்ற இந்த வரி முன்னான் இந்தியப் பிரதமர் அன்னை இந்திரா காந்திக்கு மிகவும் பிடித்தமானது. அன்னை இந்திரா காந்தி ஐக்கிய நாடுகள் பேரவையில் பேசும் பொழுது "யாதும் ஊரே ! யாவரும் கேளிர்!" என்ற வரியை மேற்கோள் காட்டிப் பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று எங்குப் பார்த்தாலும் குறுகிய நிலையில் ஊர்ப்பற்றுக்களும், சாதிப்பற்றுக்களும், மதப்பற்றுக்களும், நாட்டுப் பற்றுக்களும் வளர்ந்து மனித குலத்தை என்புருக்கி நோய் போல் அழித்து வருகின்றன. நாட்டுப்பற்று, மற்ற நாடுகளுக்குத் தீமை செய்ய தூண்டுகிறது. ஆதிக்கம் செய்ய நினைப்பவர்கள் கெட்ட போர்களைத் தோற்றுவித்து வளர்க்க நாட்டுப்பற்றையே கருவியாகக் கொள்கின்றனர். இன்று நடக்கும் வளைகுடாப் போர் ஆதிபத்திய ஆசையின் காரணமாகத் தோன்றிய நாட்டுப் பற்றின் விளைவே! மொழிப்பற்று பல மொழிகளைக் கற்பதை, அறிவை விரிவாக்கிக் கொள்ளும் முயற்சியைத் தடை செய்து விடுகிறது. மதப்பற்று மனித நேயத்திற்கே உலை வைத்து, பூரணத்துவம் உள்ள கடவுளையே பின்னப்படுத்தி "இவர் தேவர் அவர் தேவர்" என்ற சண்டைகள் தோன்றக் காரணமாகிறது. சாதிப்பற்று மனிதகுல உறவை அழித்து விடுகிறது. ஆதலால், நமது இலட்சியும் ஒருலகம், ஒரு மொழி, ஒரு மதம் என்று வளர, வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். "யாதும் ஊரே! யாவரும் கேளிர்!” என்று சொன்ன கணியன் பூங்குன்றன். இந்தியாவை உருவாக்கிய கவிஞன். கணியன் பூங்குன்றன் வழித்தடத்தில் வாழ்வோமாக! எல்லா ஊர்களும் நம்முடைய ஊர்களே! அனைவரும் நம்முடைய உறவினர்களே !