பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 13.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

374

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கோட்டிற்குக் கீழ் கோடானு கோடி மக்கள், எண்ணற்ற இளைஞர்களின் இளமை, பாலைவனத்தில் காயும் நிலவெனப் பாழாகிறது. 20 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. உழைத்து வாழும் உரிமை கிடைக்கவில்லை. வாழ்க்கை முழுதும் பல்வேறு பாத்திரங்கள் வந்து வாழ்க்கையை வளப்படுத்தும் மகளிர்க்குப் பண மதிப்பீட்டுச் சமுதாயம் விளைத்திருக்கும் இன்னல்கள் பலப்பல. அவர்கள் வாழ்க்கையில் என்று உரிமை மகிழ்வு பொங்கப் போகிறதோ? எங்கும் சாதிப் புன்மைகள்? மதபேதங்கள்! அதேபொழுது, ஆடம்பரமான வாழ்க்கைப் போக்குகள்! இன்று படைப்பாக்கம் வளரவில்லை! படைப்பாற்றலில் வேட்கையில்லை! எங்கும் நுகர்வுப் போக்கு மேம்பட்டு வளர்ந்துள்ளது. இது வரவேற்கத்தக்கதன்று. நீங்கள் கடன்காரர்களாகப் பிறந்து கடன்காரர்களாக வளர்க்கப்படுகிறீர்கள்! வாழ்கிறீர்கள்! போதும் போதாதற்கு அந்நிய மூலதனத்திற்கு வேறு நடை பாவாடை விரித்து வரவேற்கப் போகிறார்கள்! மக்களுக்கு லாட்டரிச் சீட்டுக்களையும் மதுக்கடைகளையும் களியாட்டங்களையும் காட்டி, அவர்களை அறிவும் ஆளுமையும் அற்றவர்களாக்கி ஆளப் பார்க்கும் கொடுமை தாங்க முடியாதது. தூறலால் பயிர்கள் வளர்ந்துவிடா! நாட்டை இலவசங்கள் வளர்த்துவிடா. உரிமை சார்ந்த வாழ்க்கையும் கடமை தழுவிய வாழ்க்கையுமே வளர்க்கும். இந்த உணர்வு உங்களிடத்தில் நீங்காமல் நிலைபெற்றுப் புதிய பொலிவடைய பாரதத்தைப் படைக்க போராடுவீர்களாக. இது தொடர்பாக மில்டன் கூறியிருப்பதை இங்கே குறிப்பிடுகின்றோம்.

'முழுமைத் தன்மை வாய்ந்ததும் கருணையுள்ளமும் கொண்ட கல்வி, ஒரு மனிதனை நியாயத் தன்மையுடைய திறமையுடைய செயல்களைச் செய்யச் செய்வதுடன் தன்னுடைய வாழ்கையிலும், பொது வாழ்க்கை யிலும், சண்டைகளின்றிச் சமாதானம், காப்பதிலும் நடந்து கொள்ளக் கற்றுத் தரும்